24 மணி நேரத்தில் நிதி அமைச்சர் ராஜினாமா: பெரும்பான்மை இழந்த ராஜபக்சே

Published On:

| By admin

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அதன் அடுத்த கட்டமாக அரசியல் நெருக்கடிக்கும் உள்ளாகி இருக்கிறது.

அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது.

இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 3 இரவு ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். ராஜபக்சே சகோதரர்களின் இளையவரான பசில் ராஜபக்சே தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய நிதியமைச்சராக அலி சப்ரி நேற்று ஏப்ரல் 4ஆம் தேதி நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் இன்று ஏப்ரல் 5ஆம் தேதி தனது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

“நான் ஏற்கனவே நீதித்துறை அமைச்சராக இருந்தேன். அதை ராஜினாமா செய்தபோது மீண்டும் அமைச்சராக வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார் அலி சப்ரி. இலங்கையின் நிதியமைச்சர் பதவியை ஏற்பதற்கு எவ்வளவு தயக்கம் இருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்.

இந்த அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் பொருளாதார நெருக்கடி பற்றி விவாதிக்க நாளையும் நாளை மறுநாளும் கூடுகிறது.
இன்று நாடாளுமன்றம் கூடிய நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 41 எம்பிக்கள் விலக்கிக் கொண்டு விட்டனர்.

கடந்த பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணிக்கு மொத்தம் 145 இடங்கள் கிடைத்த நிலையில், இப்போது 41 உறுப்பினர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால், வெறும் 104 இடங்களே ராஜபக்சேக்களிடம் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இதே நாடாளுமன்றத்தை வைத்து அடுத்த ஆட்சியா அல்லது மீண்டும் தேர்தலா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கையில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லாதது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இதனால் குழப்பக் கடலில் மூழ்கியிருக்கிறது இலங்கை.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share