சிறப்புக் கட்டுரை: காவாக்கால்…!?

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

குறட்டை

அபான வாயு

இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.

வெளியிடுபவர்களுக்கு அது சுகம் !

அனுபவிப்பவர்களுக்கு அது துக்கம் !

கங்கா ஜலம் என்றும் – சாக்கடை ஜலமென்றும் உவமைகளை அள்ளி வீசி தனது எழுபது வயதில் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறார் ஒருவர்.

அதே எழுபது வயதில் சிறையில் வதைபட்டு மீண்டு வரத் தத்தளிக்கும் ஓர் விதவை பெண்மணியை தரம் தாழ்ந்து பேசியதால் சகட்டு மேனிக்குப் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறார் அடுத்த தலைமையை பிடிக்க விரும்பும் இளைஞர் ஒருவர்.

மேலிரண்டு அசிங்கங்களும் தனிப்பட்டவர்களுக்கானது எனச் சொல்லிவிட முடியாது. அந்தப் பேச்சு அவர்களையே அறியாமல் பல லட்சக்கணக்காண அப்புராணி மக்களை பாதிக்கக் கூடியதாகிறது என்பதை அவர்கள் உணர்ந்தாக வேண்டும்.

மரியாதைக்குரிய மூப்பனார் அவர்களின் வார்ப்பு என அறியப்படும் பட்டறிவு கொண்ட அண்ணன் திருமாவளவன் கூட அதில் அடக்கமாகிப் போனார்.

திருமா, இந்துப் பெண்களைப் பற்றி ஓர் கருத்தை சொல்கிறார். அதனை, ‘ விருப்புக் குறிப்போடு’ (INTENTIONAL) அவர் சொல்லவில்லை என்று மறுத்தாலும் கூட, அவரது கூற்றின் மேல் பெண்கள் சமூகத்தில் பரந்து பட்ட அதிருப்தி எழுந்து நின்றது உண்மை.

அதன், பின் விளைவு என்ன ?

அலுவலகத்தில் – சந்தையில் – வீதிவழியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அப்புராணி ஒருவரைக் காணும் பொழுதில் காரணமே இல்லாமல் சக சமூகம் திருமா சொன்ன கருத்தைக் கொண்டு அந்த மனிதரை மனதுக்குள் கருவிக் காறிக் கொள்கிறது.

எதிராளியின் கண்களில் தென்படும் அந்தக் காறுதலைக் கண்ட அந்த அப்புராணி சங்கடத்தை எதிர்கொள்ள முடியாமல், ‘ கடவுளே, இவர்களுக்கு நான் செய்த தவறென்ன ?’ என மனதுக்குள் அழுதபடி நகர்கிறார்.

போலவே தான், ‘என் சமூகப் பெண்ணை சாக்கடை என்று சொன்னவரின் சமூகம்தானே நீ…’ என்னும் காறுதலை ஓவ்வொரு அப்புராணி பிராம்மணரும் எதிர் கொண்டு தலை குனிந்து போகிறார்.

அதனிலும் இறங்கி ஆபாசமாகப் பேசிவிட்டாரே என்னும் காறுதலை ஒவ்வொரு திமுக அப்புராணியும் இன்று எதிர் கொள்கிறார்.

சாக்கடை என்னும் வசவுக்கோ ஆபாச விளிப்புக்கோ தகுந்தவர்தானா சசிகலா அம்மையார் ? ஆம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை அம்மையார் என்று அழைக்கக் கூடுமானால் சசிகலா அவர்களையும் அவ்வாறே அழைத்தாக வேண்டும்.

ஆட்சியிலும் – காட்சியிலும் – சட்டம் கொடுத்த தண்டனையிலும் பாதியாக நின்றுதானே சிறைக்கு போனார் சசிகலா அம்மையார் ! செத்துப் போய் விட்ட ஒரே காரணத்தால் ஜெயலலிதா அம்மையார் செய்த குற்றம் எல்லாம் மறைந்து விடுமா என்ன ?

விஷயத்துக்கு வருவோம்.

*மன்னுயிர் ஓம்பி அருலாளவர்க் கில்லென்ப*

*தன்னுயிர் அஞ்சும் வினை*

அதாவது, சக உயிர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்

தன் உயிரைப் பற்றிக் கவலைப்பட மாட்டார் .- இது குறள் வேதம் !

இதனை, உல்டா செய்து பார்த்தால்…

தான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் சக உயிர்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டான்.

ஒரு தனி மனிதன் தன் சமூகத்தை பாதித்து விடக் கூடியதொரு செயலை துணிந்து செய்யக் கூடியவனாக இருப்பானேயானால் அப்பேற்பட்டவனை அந்த சமூகம் தூக்கி சுமப்பதில் பயனில்லை. ஒதுக்கி விடுதலே நலம் என்கிறது சாணக்கிய சாஸ்திரம்.

இன்றைய ஜனநாயக சமூகத்தில் ஒரு கட்சியில் அல்லது சமூக அந்தஸ்தில் இருக்கக் கூடியவர்கள் தங்களது சுய நியாயத்தை மட்டுமே முன் வைத்து வாயாடி நிற்பதால் ஒட்டு மொத்த சமூகத்தையே ஆபத்தில் தள்ளிவிடுகிறோம் என்பதை உணர வேண்டும்.

அது, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியோ, அண்ணன் திருமாவோ, மூன்றாம் கலைஞர் உதயநிதியோ யாராக இருந்தாலும் அவர்கள் அளவுக்கு எந்த ஆபத்தும் அண்டிவிடாதுதான். அவர்கள் மட்டில் சுகமாக இருந்து கொள்ள முடியும்தான்.

ஆனால், அவர்களது அடையாளத்தை சுமந்து கொண்டிருக்கும் அப்பாவி மனிதர்களின் கதி அதோ கதி ஆகிவிடும் என்பதை அவர்கள் உணரந்தாக வேண்டும். அல்லவெனில், தங்களது சுய பாதுகாப்புக் கருதி அந்த சமூகம் அவர்களை புறந்தள்ளிவிடும்.

இரட்டைக் கோபுரத்தை சாய்த்து அதனோடு மூவாயிரம் அப்பாவிகளையும் கொன்றொழித்த பின்லேடன் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தால், அவர் போல் உடையணிந்த அத்துனை பேரையும் இன்றும் அச்சத்தோடு எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறது அமேரிக்க சமூகம்.

வெள்ளுடை அணிந்து அன்பை போதிக்கும் சூஃபி இனத்தார்களும் அதில் அடக்கமாகிப் போனது பெருந்துயரம். தனி ஒருவனின் ஆர்ப்பாட்டம் அவன் சார்ந்த ஒட்டு மொத்த சமூகத்தையும் காரணமின்றிப் பாதித்து விடும் என்பதற்கு இது கொடூர உதாரணம்.

திருவள்ளுவரின் உடையும் – வள்ளலாரின் உடையும் – அன்னை தெரேஸாவின் உடையும் வெள்ளுடைதான் என்பதை எளிதில் மறந்து போகும் இந்த சமூகம், தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியதை மட்டுமே முன் நிறுத்தி அச்சம் கொள்ளும்.

ஆக, உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தகுந்த செயலை – தகுந்த வார்த்தைகளை வெளிப்படுத்தி இந்த சமூகத்தை வழி நடத்தியாக வேண்டும். அல்லவெனில், மானுட சமூகம் அவர்களைப் புறந்தள்ளிப் போகும்.

ஒட்டு மொத்த மானுட சமூகத்தையும் நான்கைந்து சதவிகிதம்தான் ஆளுகின்றது. சில சதவிகிதம் அதற்கு துணை போகிறது. ஏறத்தாழ தொண்ணூறு சதவிகித சமூகம் மந்தைகளாகப் பின் தொடர்ந்தே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது என்று ஒரு தியரி சொல்லப்படுவது உண்டு.

அந்த நான்கைந்து சதவிகிதத்தில் தானும் அடக்கம் என்று கருதிக் கொள்வோர்க்கு நாவடக்கமும் அவசியம் என்கிறார் திருக்குறளாசான். அல்லவெனில், ‘சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு…’ என எச்சரிக்கிறார். அசிங்கச் சொற்களால் அர்ச்சிக்கப்படுவீர்கள் என அறிவுறுத்துகிறார்.

தன் இருப்பைக் குறித்த அச்சம் இருப்பவர்கள்தான் அடுத்தவர்களைக் காயப்படுத்த முனைவார்கள் என்கிறார் இந்திய உளவியல் மேதை சென் குப்தா.

குருக்ஷேத்திர கோமகன் புன்சிரிப்போடு சொல்கிறான்…

**உன்னால் ஆகக் கூடியது இங்கே ஏதும் இல்லை அர்ஜுனா…உன் வில்லும் நானே. அதில் ஏறும் அம்பும் நானே. அந்த அம்பைப் பொருத்தும் விரல்களும் நானே. அம்பு புறப்படும் கணம் அனைத்தும் நானே !**

இந்த முட்டாள் அரசர்களின் குணத்தை மாற்றியே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்த சீன தத்துவ ஞானி கன்ஃபூஷியஸ் தனது இறுதிக் காலத்தில் இவ்வாறு சொல்கிறார்…

**“ஐயகோ, எனது ஒட்டு மொத்த வார்த்தைகளும் பயனற்றுப் போகிறது. என் மரணம் கண்ணில் தெரிகிறது. எனக்கு சொர்க்கம் மறுக்கப்பட்டுவிட்டது…”**

உலக வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் அறிவாளிகள் என எழுந்தவர்கள் தலைகள் எல்லாம் குட்டப்பட்டே வந்திருக்கின்றது.

ஆம், காலம் பொல்லாதது !

**கட்டுரையாளர் குறிப்பு**

**ஸ்ரீராம் சர்மா**

எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share