சபாநாயகர் நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டுமென பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அரசு மீது நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டுமென திமுக கொறடா சக்கரபாணி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டுமென சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது எனக் குறிப்பிட்டு வழக்கினை முடித்துவைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் கடந்த 9ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். அதில், ஏன் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தீர்கள் என்பது உள்ளிட்ட சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு 11 பேரும் விளக்கம் அளிப்பதை பொறுத்து அவர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நோட்டீஸுக்கு பதிலளிக்க தங்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வேண்டுமென சபாநாயகர் தனபாலுக்கு 11 எம்.எல்.ஏ.க்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்காக சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அவையில் பங்கேற்க வேண்டும் என்பதை காரணம் காட்டி ஒரு மாதம் அவகாசம் கோரியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
தினகரனுக்கு ஆதரவளித்த 18 எம்.எல்.ஏக்களுக்கு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியபோது, ஒரு வார காலம் மட்டும் அவகாசம் வழங்கப்பட்டது. சபாநாயகரை தங்க தமிழ்ச்செல்வன் நேரில் சந்தித்து, விளக்கம் அளிக்க 15 நாட்கள் வேண்டுமென கேட்டபோதிலும் அவகாசம் மறுக்கப்பட்டது. செப்டம்பர் 22ஆம் தேதி 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எனினும், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேருக்கும் சபாநாயகர் அவகாசம் வழங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள் தலைமைச் செயலக வட்டாரங்களில்.
**எழில்**
�,