மக்களின் குரலுக்குச் செவி சாயுங்கள்: சோனியா காந்தி

Published On:

| By Balaji

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்கள், மாணவர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மாலை டெல்லியில் நடந்த போராட்டம், வன்முறையாக மாறியது. கல்வீச்சு தாக்குதல் மற்றும் வாகனங்களுக்குத் தீவைத்தல் ஆகிய சம்பவங்களும் அரங்கேறின. உத்தரப் பிரதேசத்தில் நடந்த வன்முறையில் 5 பேர் வரை உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு நாட்டில் அமைதியின்மை நிலவி வரும் நிலையில் நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை, வீடியோ மெசேஜ் மூலம் பேசிய சோனியா காந்தி, மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் சோனியா காந்தி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பாஜக அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகக் காங்கிரஸ் ஆழ்ந்த வருத்தத்தையும், அக்கறையையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

”பாஜக அரசின் பிரிவினைவாத கொள்கைகளுக்கும், மக்கள் விரோத செயல்களுக்கும் எதிராகப் பல்கலைக் கழகங்கள், ஐஐடி, ஐஐஎம் மற்றும் பல கல்வி நிறுவனங்களில் தன்னெழுச்சியாக போராட்டங்கள் எழுந்துள்ளன. ஜனநாயகத்தில் ஒரு அரசின் தவறான கொள்கைகளையும், முடிவுகளை எதிர்த்துப் போராட மக்களுக்கு உரிமை இருக்கிறது. அவர்களின் குரலுக்குச் செவி சாய்க்க வேண்டியது அரசின் கடமை. பாஜக அரசு மக்களின் குரல்களை முற்றிலும் புறக்கணிப்பதுடன், முரட்டுத் தனமான சக்தியைப் பயன்படுத்தி வருகிறது. இது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் இதுபோன்ற செயல்களைக் கண்டிப்பதாகவும், காங்கிரஸ் எப்போதும் மாணவர்களுக்கும் மக்களுக்கும் தோழமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள சோனியா காந்தி, ”குடியுரிமை திருத்தச் சட்டமும், என்.ஆர்.சி திட்டமும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் மக்கள் தங்களது மற்றும் முன்னோர்களின் குடியுரிமையை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள்” என்றார்.

இந்திய மக்களின் அடிப்படைக்காகவும், இந்திய அரசியலமைப்புக்காகவும் காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நேற்று இரவு இந்தியா கேட் பகுதியில் நடந்த போராட்டத்தில் கிழக்கு உபி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். 2 மணி நேரம் போராட்டத்தில் கலந்துகொண்ட அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்களைப் பிரிப்பதை ஏற்க முடியாது. குடியுரிமை கேட்டு மக்கள் வரிசையில் நிற்க வேண்டும் என இந்த அரசு விரும்புகிறது. இதனை அனுமதிக்கமாட்டோம் என்றார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share