காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் காணொலி மூலம் நேற்று (ஆகஸ்ட் 24) ஏழு மணி நேரம் நடந்த நிலையில், சோனியா காந்தியே தலைவராகத் தொடர்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முழுமையாக முறையாகக் கூடும்வரை சோனியாவே தலைவர் என்று நேற்றைய கூட்டம் தீர்மானித்துள்ளது.
சோனியா காந்திக்கு எதிராக 23 தலைவர்கள் எழுதிய கடிதம்தான் நேற்றைய கூட்டத்தின் எரிபொருளானது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் 23 பேரை அவதூறாக பேசினர். அதேநேரம் அந்தத் தலைவர்களால் எழுப்பப்பட்டவை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் ஆராய சோனியாவுக்கு உதவ ஒரு குழுவை அமைக்க கட்சி முடிவு செய்துள்ளது. இப்போதைக்கு சோனியா இடைக்கால கட்சித் தலைவராகத் தொடர்ந்தாலும், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமர்வு கூட்டப்பட வாய்ப்புள்ளது.
கூட்டம் தொடங்கியபோதே தலைவர் பதவியில் தான் தொடர விரும்பவில்லை என்று சோனியா தெரிவித்த பின்னர், பலர் ராகுல் காந்தியைப் பொறுப்பேற்கச் சொன்னார்கள். அதேநேரம் ஒரு முழு நேர தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறைகளைத் தொடங்குமாறு காங்கிரஸ் அமைப்புப் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம் சோனியா ஒரு கடிதத்தை அளித்தார். அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனி ஆகியோர் முழுநேர தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை சோனியாவைப் பதவியில் தொடருமாறு கேட்டுக் கொண்டனர்.
சோனியா காந்தியுடன் நெருக்கமாகக் கருதப்படும் ஆண்டனி, தலைவர்கள் சோனியாவுக்கு எழுதிய அந்தக் கடிதம் கொடூரமானது என்று கூறி எதிர்ப்பாளர்களைத் தாக்கினார். சோனியாவுக்குக் கடிதம் எழுதியவர்களில் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நான்கு பேர் இருந்தனர். அவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக் மற்றும் ஜிதின் பிரசாதா ஆகியோர்.
காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி, அம்பிகா சோனி போன்ற தலைவர்கள் சோனியாவுக்குக் கடிதம் எழுதியவர்களைக் கூட்டத்தில் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். “அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அம்பிகா சோனி கோரிக்கை வைத்தார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம், அந்தக் கடிதம் பற்றி தன் பேச்சில் எதுவும் குறிப்பிடவில்லை. அதை எழுதியவர்களுக்கு எதிராகவும் எதுவும் கூறவில்லை. ‘கட்சியில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை கவனிக்க வேண்டும்” என்று மட்டுமே பேசியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
**தீர்மானங்கள்**
காங்கிரஸ் செயற்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்…
“கடந்த ஆறு மாதங்களாக நாடு பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. (I) ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற கொரோனா தொற்றுநோய், (ii) கீழ்நோக்கிச் சுழலும் பொருளாதாரம், (iii) பெரிய அளவிலான வேலை இழப்புகள் மற்றும் வளர்ந்து வரும் வறுமை, மற்றும் (iv) இந்திய எல்லைக்குள் சீனாவின் வெட்கக்கேடான ஆக்கிரமிப்பு ஆகியவை பெரும் பிரச்சினைகளாக இருக்கின்றன.
மத்திய அரசை அம்பலப்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் இரு குரல்களாக திருமதி. சோனியா காந்தி மற்றும் திரு. ராகுல் காந்தி இருக்கிறார்கள். புலம்பெயர்ந்தோரின் நெருக்கடியைக் கையாள்வது குறித்து சோனியா காந்தியின் கடினமான கேள்விகள் இந்த அரசாங்கத்தை அவமானப்படுத்தின. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் தொற்றுநோயை திறம்பட சமாளிப்பதை உறுதிசெய்ததோடு, அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகாதார மற்றும் சிகிச்சைக்கான அணுகலை வழங்கியுள்ளன. சோனியாவின் தலைமை இந்த அரசாங்கத்தில் மிக உயர்ந்த அலுவலகங்களில் இருப்பவர்களை சங்கடத்துக்கு ஆளாக்கியுள்ளது.
ராகுல் காந்தி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னணியில் இருந்து உறுதியாக வழிநடத்தியுள்ளார். இந்த நேரத்தில் கட்சியையும் அதன் தலைமையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ அல்லது பலவீனப்படுத்தவோ யாரும் இருக்க மாட்டார்கள் அல்லது அதற்கு அனுமதிக்க முடியாது என்பதை இந்த செயற்குழு தெளிவுபடுத்துகிறது. இந்தியாவின் ஜனநாயகம், பன்முகத்தன்மை மீதான மோடி அரசாங்கத்தின் தீங்கு விளைவிக்கும் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதே ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டன் மற்றும் தலைவரின் பொறுப்பாகும்.
உள்-கட்சி பிரச்சினைகளை ஊடகங்கள் மூலமாகவோ அல்லது பொது அரங்குகளிலோ விவாதிக்க முடியாது. இத்தகைய பிரச்சினைகளை தனியுரிமை மற்றும் ஒழுக்கத்தின் நலனுக்காக கட்சி அரங்குகளில் மட்டுமே எழுப்புமாறு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் செயற்குழு வலியுறுத்துகிறது.
மேலே பட்டியலிடப்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், அதற்கு பொருத்தமானது எனக் கருதக்கூடிய தேவையான நிறுவன மாற்றங்களை செய்யவும் காங்கிரஸ் தலைவருக்கு செயற்குழு அதிகாரம் அளிக்கிறது.
மேற்கண்ட விவாதங்கள் மற்றும் முடிவுகளின்படி காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக திருமதி. சோனியா காந்தி இந்திய தேசிய காங்கிரஸை தொடர்ந்து வழிநடத்துவார் என முடிவெடுக்கிறது” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
**-ஆரா**
�,