அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
1981ம் ஆண்டு அண்ணா மேலாண்மை நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு இளநிலை உதவியாளர்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை அனைத்து தரப்பினருக்குமான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதன் பெயர் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என மாற்றப்பட்டது.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தலைமை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்புகள் கட்டப்பட்டு வந்தன.
இந்நிலையில் இக்கல்லூரி வளாகத்தில் 8 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆறு குளிர் சாதன வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் 15 குளிர் சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகள் அடங்கிய இரண்டு புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 4) காலை 10 மணிக்கு திறந்து வைத்தார்.
அவருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதுபோன்று, இந்து சமய அறநிலையத்துறை உயர் அலுவலர்களுக்கு ரூ.5.08 கோடியில் 69 வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, காவல்துறையினரின் சேவைகளை பொதுமக்கள் அவசர காலங்களில் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட காவல் உதவி செயலியையும் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
**-பிரியா**