தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான மே 2ஆம் தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு பொதுவெளியில் அதிகரித்துள்ள நிலையில், திமுகவுக்குள்ளோ, ‘நாம் தான் ஆட்சி அமைக்கிறோம். அமைச்சர்கள் யார் யார் என்பதுதான் கேள்வி’என்கிறார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியில் இருந்து 21ஆம் தேதி வரைக்கும் குடும்பத்தோடு கொடைக்கானலில் இருந்தார். தேர்தல் நேர பயணத்துக்கான ஓய்வாக இந்த பயணம் கருதப்பட்டாலும், கொடைக்கானலில் இருந்தபோது அடுத்த கட்ட நகர்வுக்கான முக்கிய சில முடிவுகளை ஸ்டாலின் எடுத்திருக்கிறார்.
திமுகதான் ஆட்சி அமைக்கும் என்று தனக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் ஸ்டாலின் கொடைக்கானலில் இருந்தபடி அமைச்சரவை பட்டியலை தயாரித்துவிட்டார். வெள்ளை பேப்பரில் ஸ்டாலினே தன் கைப்பட அமைச்சர்களின் பெயர்களை எழுதி வைத்துள்ளார். 2006 கலைஞர் அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களில் ஸ்டாலின் உள்ளிட்ட 17 பேர்தான் இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் யார் யார் மேல் வழக்கு உள்ளது என்பதையெல்லாம் ஆராய்ந்து ஒரு ஃப்ரஷ்ஷான கேபினட் பட்டியலை கொடைக்கானலில் தயாரித்திருக்கிறார் ஸ்டாலின். கலைஞர் அமைச்சரவையில் இடம்பெற்ற அவர்கள் எல்லாரும் மீண்டும் அமைச்சர் பதவி அடைய விரும்பினாலும், கடுமையான வடிகட்டல் முறைகளை பின்பற்றி பட்டியல் தயாரித்திருக்கிறார் ஸ்டாலின்.எனவே அதில் புதுமுகங்கள்தான் அதிகம் இடம்பெற வாய்ப்புள்ளது. இதுகுறித்து மின்னம்பலத்தில் [அமைச்சரவையில் புதுமுகங்கள்: கொடைக்கானலில் ஸ்டாலின் ஆலோசனை](https://www.minnambalam.com/politics/2021/04/18/37/dmk-president-stalin-discuss-kodaikanal-cabinet-new-comers-majority) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
கொடைக்கானலில் தன் கைப்பட எழுதி வைத்திருக்கும் அமைச்சரவைப் பட்டியலில் சென்னை வந்தும் ஸ்டாலின் ஏப்ரல் 25 ஆம் தேதி சில மாற்றங்கள் செய்திருப்பதாகவும் திமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதாவது உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிப்பதா வேண்டாமா என்ற விவாதம் கொடைக்கானல் முதல் சென்னை வரை தொடர்ந்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு அளிக்க வேண்டாம் என்று ஐபேக் ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்ததாக அப்போதே தகவல்கள் வெளியாயின. ஆனாலும், ‘தற்போதைய தேர்தலை விட்டால் அடுத்து இன்னும் ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். இப்போதே உதயநிதிக்கு 43 வயது ஆகிறது. அடுத்த தேர்தலில்தான் நிற்க வேண்டும் என்றால் அவருடைய சீனியாரிட்டி என்ன ஆவது? எனவே இப்போதே உதயநிதி தேர்தலில் நிற்க வேண்டும்’ என்று அவரது தரப்பினர் ஸ்டாலினை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர். இதே ரீதியான அழுத்தங்கள் உதயநிதி அமைச்சர் ஆவதற்கும் காரணங்களாக ஸ்டாலின் முன்னால் வைக்கப்பட்டிருக்கின்றன.
இதையடுத்து உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் கட்சிக்குள், குடும்பத்துக்குள் என்னென்ன ரியாக்ஷன்கள் ஏற்படும் என்பது பற்றியும் ஆலோசித்திருக்கிறார் ஸ்டாலின்.
இதுஒருபக்கம் என்றால்… கொடைக்கானலில் தயாரித்த பட்டியலில் சபாநாயகர் பதவிக்கு சீனியர் பெண் தலைவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் பெயர் இருப்பதையும் மின்னம்பலம் செய்தியில் வெளியிட்டிருந்தோம். சுப்புலட்சுமி ஜெகதீசன் இப்போது கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார். அவர் அமைச்சராக ஆகிறார் என்றால், கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால் சபாநாயகர் ஆக பொறுப்பேற்க வேண்டிய நிலை வந்தால், திமுகவில் வகித்து வரும் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.
அரசியலில் எல்லாமே கணக்கு போட்டு காத்திருப்பதுதானே… அப்படி சுப்புலட்சுமி ஜெகதீசன் சபாநாயகர் ஆகி அதன் விளைவாக துணைப் பொதுச் செயலாளர் பதவியை விட்டு விலகினால் அந்த இடத்துக்கு யார் என்ற போட்டி திமுகவுக்குள் ஆரம்பமாகிவிட்டது.
திமுகவில் துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ.. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, ஆ,ராசா ஆகியோர் தற்போது இருக்கின்றனர். ஐ.பெரியசாமி முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர், சுப்புலட்சுமி ஜெகதீசன் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர், பொன்முடி உடையார் சமூகம், அந்தியூர் செல்வராஜ் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆ.ராசா பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தன்னை பட்டியல் இன கோட்டாவின் அடிப்படையில் துணைப் பொதுச் செயலாளர் ஆக்கக் கூடாது கட்சியின் சீனியாரிட்டி அடிப்படையில் பொது நபராகவே ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதன்படியே அவர் துணைப் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார்.
இந்த நிலையில் இவர்களில் சுப்புலட்சுமி ஜெகதீசன் சபாநாயகர் ஆகி துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் அந்த பதவியை ஒரு பெண்ணுக்குத்தான் மீண்டும் தரவேண்டும். ஏனெனில் துணைப்பொதுச் செயலாளர் பதவியில் பெண்களுக்கான ஒரு இடம் எப்போதும் திமுகவில் உண்டு. ஒருவேளை சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவியை ராஜினாமா செய்தால், தற்போது நாடார் சமூகத்துக்கு திமுக கட்சிப் பதவிகளில் பிரதிநிதித்துவம் ஏதும் இல்லாத நிலையில் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழியை நியமிக்கலாம் என்ற திட்டம் ஸ்டாலினிடம் இருக்கிறது.
கனிமொழி ஏற்கனவே கட்சியின் தென் மண்டல விவகாரங்களை கவனித்து வருகிறார், மகளிரணிச் செயலாளராக இருக்கிறார். உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிப்பதன் மூலம் கனிமொழி வட்டாரத்தில் ஏற்படும் சலசலப்புகளை சமாளிக்க அவரை துணைப் பொதுச் செயலாளர் ஆக்கலாம் என்று ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதற்கான ஒரு முன்னோட்டமாகத்தான் கட்சியின் மகளிரணிச் செயலாளராக தற்போது இருக்கும் கனிமொழியை ஸ்டெர்லைட் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுகவின் பிரதிநிதியாக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியோடு சேர்த்து அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.
ஸ்டாலின் பாணியிலேயே சொல்வதென்றால்… ‘ஆக தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுகவின் கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது’!
**-வேந்தன்**�,