சென்னை மருத்துவமனையில் சிவசங்கர் பாபா: முன்னாள் மாணவி கைது!

Published On:

| By Balaji

சிவசங்கர் பாபா நடத்திவரும் சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவி சுஷ்மிதா நேற்று (ஜூன் 18) கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சுஷ்மிதா கேளம்பாக்கத்தில் இருக்கும் பள்ளி வளாகத்திலேயே குடும்பத்தோடு வசித்து வருகிறார். நேற்று கேளம்பாக்கம் பள்ளி வளாகத்தில் சிபிசிஐடி குழுவினர் சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது சுஷில் ஹரி பள்ளி வளாகத்திலேயே தங்கியுள்ள ஆசிரியர்கள் கருணா, நீரஜ் ஆகியோரையும் முன்னாள் மாணவி சுஷ்மிதாவையும் சென்னை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளில் ஒன்றில் சுஷ்மிதா பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் இருவர், சுஷ்மிதா ஆகியோரிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சுமார் 5 மணி நேரமாக விசாரணை நடந்தது. இந்த விசாரணைக்குப் பின்னர் அப்பள்ளியின் முன்னாள் மாணவி சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு சுஷ்மிதாவும் உடந்தையாக இருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளில் ஒன்றில் சுஷ்மிதாவின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் நேற்று மாலை சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஆசிரியர்களும் விரைவில் கைதாகலாம் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

இதே நேரம், செங்கல்பட்டு கிளைச் சிறையில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிவசங்கர் பாபா, நேற்று இரவு திடீரென உடல் நிலை மோசமானதாக கூறி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். செங்கல்பட்டிலிருந்து போலீஸ் பாதுகாப்போடு அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிவசங்கர் பாபாவை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.ஆனால் உடல்நிலை சரியில்லை என்று அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதால், இந்த இடைவெளியில் வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் சிவசங்கர் பாபாவிடம் பிறகு விசாரணை நடத்தலாமென்று திட்டமிட்டுள்ளார்கள் போலீஸார்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share