இன்று (ஜூன் 14) நடைபெற்ற அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. வரும் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நான்கரை மணி நேரமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் மா.செ.க்கள் தலைமை கழக நிர்வாகிகளிடத்தில் இருந்து கருத்துகள் வரவேற்கப்பட்டன. ஆரோக்கியமான முறையில், அமைதியான முறையில் நடைபெற்றது. 23ஆம் தேதி பொதுக்குழு கூடவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு மா.செக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்தான விவாதம் ஆரோக்கியமான முறையிலிருந்தது. பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஒற்றை தலைமைதான் தேவை என்று வலியுறுத்தினர். ஆனால் இப்போது யார் அந்த தலைவர் என்பது குறித்து விவாதிக்கப்படவில்லை. இதுகுறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்” என்றார்.
அப்போது இரட்டை தலைமையிலிருந்து ஒற்றைத் தலைமை என முடிவெடுப்பதற்குக் காரணம் என்ன என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயக்குமார், “காலம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அன்று இருந்த நிலைமை வேறு, இன்று இருக்கும் நிலைமை வேறு. ஒட்டு மொத்தமாக அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்ப்பது ஒற்றை தலைமைதான். காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் இன்று இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதற்கு மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆதரவைத் தெரிவித்தனர். இதற்குச் செயல்வடிவம் தலைமைதான் கொடுக்கும். இந்த செயல்வடிவம் எப்போது வரும் என்பது குறித்து வரும்போது பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
மேலும் அவர், “2600 பேர் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். 2500க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 5,6 ஆயிரம் பேர் அமர்வதற்கு ஏற்ற வகையில் இடம் வேண்டும். இடம் பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
சசிகலா கட்சியில் இல்லை. அவருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை. அவரை பற்றி பொதுக்குழுவில் விவாதித்து எங்களுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இரட்டை இலை இருக்கும் வரை அதிமுகவுக்கு வாக்கு வங்கி குறையாது. 2021ல் திமுக வந்திருக்கிறது. அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சி மலரும். யார் வேண்டுமானாலும் எதிர்க்கட்சி என்று சொல்லலாம். ஆனால் அதிமுகதான் முதன்மையான எதிர்க்கட்சி. மற்றவை எல்லாம் எதிரிக்கட்சிகள் கிடையாது, உதிரி கட்சிகள்” என்று குறிப்பிட்டார்.
கூட்டம் முடிந்ததும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகம் வெளியே, ‘வேண்டும் வேண்டும், ஒற்றைத் தலைமை வேண்டும்’ என்று கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
**-பிரியா**