குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. ஒரு சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நிகழ்கின்றன. அப்போது பொதுச் சொத்துகளும் சேதப் படுத்தப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்துகள், ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த நிலையில், ரயில்வே உட்பட பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தால் , சேதப்படுத்துபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிடுவேன் என்று மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ”ரயில் போக்குவரத்துக்காக 13 லட்சம் ஊழியர்கள் இரவும் பகலுமாக உழைக்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஆதரவு பெற்ற சில சமூக விரோதிகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷை சேர்ந்த சிறுபான்மை சமூகங்களிலிருந்து குடியேறியவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் தங்குவதற்கான உரிமையை வழங்குகிறோம். இதனால் உள்ளூர் சிறுபான்மையினர் பாதிக்கப்படமாட்டார்கள். ஆனால் சிலர் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயல்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
ஒரு ரயிலைத் தயாரிக்கப் பல ஆண்டுகள் ஆகின்றன. இதற்காகத் தொழிலாளர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். எனவே ரயில் அல்லது பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தினால் வல்லபாய் படேலை போல அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோன்று பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தினால் ஒரு அமைச்சராக கண்டதும் சுட உத்தரவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மேற்கு வங்கத்தில் ரயில் எரிப்பைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ரயில் சேவையை மத்திய அரசு நிறுத்தியது. பின்னர் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
�,”