தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நாளை முதல் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர் போன்ற பதவிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 7 மாவட்டங்களில் நடைபெறும் என தேர்வாணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், ““கொரோனா பரவும்போது தேர்வு நடத்துவதா? உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 17,18 மற்றும் 19 ஆம் தேதிகளில் டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படவுள்ள எழுத்துத் தேர்வுகளை ஒத்திவைக்கவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில், “தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையில் அலுவலர்கள், உதவி இயக்குனர்கள் 991 பேரை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 17, 18, 19 ஆகிய நாட்களில் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இத்தேர்வுகளை நடத்துவது உகந்தது அல்ல! வேளாண் அலுவலர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சிக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வு, நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.
**வினிதா**
�,