சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி ஆர் பாலு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் இன்று ஜூலை 10 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்…
“தமிழக மக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சேதுசமுத்திர திட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இக்கடிதத்தை எழுதுகிறேன். **அண்மையில் ஆக்கிரமிப்பு மனோபாவம் கொண்ட நமது அண்டை நாடான சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசுடன் உறுதியாக நின்றது**. நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுகவின் ஆதரவை தெள்ளத்தெளிவாக எங்கள் தலைவர் எடுத்துரைத்தார்.
**சீனாவின் மூலம் தென் எல்லைக்கும் ஆபத்து**
லடாக் எல்லையில் அண்மையில் சீன படைகளின் அத்துமீறிய மோதலைத் தொடர்ந்து இந்தியாவின் வடமேற்கில் பஞ்சாபிலிருந்து வடகிழக்கில் அருணாசலப் பிரதேசம் வரை உள்ள நீண்ட நெடிய எல்லை மட்டுமல்லாமல் இந்தியாவின் தென் பகுதி எல்லையான தமிழக கடலோர எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகும் நிலை உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான சேது சமுத்திரக் கடல் பகுதியில் தேசப் பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகம் உள்ளது என்பதை இந்திய அரசு உணர வேண்டும்.
காரணம் சீனா இலங்கையுடன் வேகமாக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுவருவது இந்திய பாதுகாப்பு நலனுக்கு என்றைக்குமே உகந்ததல்ல. அண்மைக்காலங்களில் சீன அரசு தமிழக எல்லையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் பெரிய அளவில் முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் அமைத்திட முதலீடுகள் செய்து வருகிறது. 2010 முதல் இலங்கையில் அதி முக்கியத்துவம் கொண்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க சீன நாடு நம்மையெல்லாம் திகைக்க வைக்கும் அளவுக்கு 7948 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ள விவரங்கள் அனைத்தும் தங்கள் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டு இருக்கும் என்று நம்புகிறோம்.
**நேபாளம் போல இலங்கை**
2010 ஆம் ஆண்டில் புதிய துறைமுகம் ஒன்றை அமைக்க 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியதுடன் மிகப்பெரிய துறைமுகத்தையும் சீன நிறுவனங்கள் மூலம் இலங்கை பிரதமர் ராஜபக்ஷேவின் தொகுதியான ஹம்பன் தோட்டாவில் நிர்மாணித்துக் கொடுத்தது சீனா. கடனைத் திரும்பத் தர இயலாமல் போனதால் இந்த துறைமுகத்தை 2017 ஆம் ஆண்டு சீனா தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிராகவும் சீனாவுக்கு ஆரவாரமான நிலையை நேபாளம் எடுத்ததுபோல இலங்கையும் எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று சுட்டிக் காட்டியிருக்கும் டி.ஆர்.பாலு மேலும் தன் கடிதத்தில்,
“மேலும் தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ வலிமையை மேம்படுத்தும் சீனாவின் ஆதிக்க முயற்சிகளுக்கு எதிராக ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து குரல் எழுப்பியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இந்தியாவும் தனது தேசிய பாதுகாப்புக் கொள்கையில் சூயஸ் பகுதி தொடங்கி தெற்கு சீன கடல் வரை நீண்டுள்ள கடல் பரப்பை உள்ளடக்கிய அம்சங்களை மேற்கொள்ள வேண்டும். காரணம் தென் தமிழக கடல் பகுதி தான் தெற்கு சீன கடலுக்கும் சூயஸுக்கும் இடையே நடுநாயகமாக இருக்கும் கடல் பரப்பாகும்.
மத்திய அரசு ஏற்கனவே அந்தமான் தீவில் உள்ள நமது முப்படைகளை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னுரிமை முனைப்புடன் மேற்கொண்டு உள்ளது வரவேற்கத்தக்கது. அது போலவே தென் தமிழக கடல் பகுதி குறிப்பாக சேதுசமுத்திர கடல் பகுதி புவியியல் ரீதியாகவும் சர்வதேச கப்பல் போக்குவரத்து முக்கியத்துவம் காரணமாகவும் நமது முழு கட்டுப்பாட்டில் இருப்பது இன்றியமையாதது.
**கலைஞர்-வாஜ்பாய் கனவுத் திட்டம்**
இந்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போது தடைப்பட்டு முடங்கிக் கிடக்கும் சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது தெளிவாகும். தேச பாதுகாப்பு அச்சத்தின் அடிப்படையில் தான் சேது சமுத்திரத் திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏற்கனவே வழங்கியது. தமிழக மக்களின் 150 ஆண்டுகால கனவான சேது சமுத்திரத் திட்டம் நனவாகும் என்ற நம்பிக்கையோடு, 15 ஆண்டுகளுக்கு முன்னால் 2005ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் மதுரையில் அடிக்கல் நாட்டினார். தொடக்கவிழாவில் எங்கள் நினைவில் வாழும் தலைவர் கலைஞர் முன்னிலை வகிக்க, திருமதி சோனியா காந்தி அவர்கள் பங்கேற்றார்.
பணிகள் சிறப்பாக முன்னேறிக் கொண்டிருந்த நிலையில் தேச நலனுக்கும் செழிப்புக்கும் எதிரான சில சக்திகள் திட்டமிட்டு சதி செய்து மதரீதியான யதார்த்தத்திற்கு ஒவ்வாத வாதங்களை முன்வைத்து இத்திட்டத்தை முடங்கிப் போகச் செய்து விட்டனர். சேது சமுத்திரத் திட்டம் இந்த நாட்டின் மாபெரும் தலைவர்களான அண்ணா, காமராஜர், கலைஞர், வாஜ்பாய் ஆகியோரின் கனவு திட்டம். **2005 ஆம் ஆண்டு நடைபெற்ற சேதுசமுத்திர திட்ட விழாவிற்கு அரசு அழைப்பு விடுத்த நேரத்தில் இது எனது திட்டம் விரைந்து நிறைவேற வாழ்த்துக்கள் என்று வாஜ்பாய் கூறியதை இன்று தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்**” என்று குறிப்பிட்டுள்ளார் டி.ஆர்.பாலு.
**தமிழக மக்கள் மனதில் மோடி நீங்கா இடம் பிடிக்க…**
மேலும், “பிரதமர் அவர்களே தாங்கள் இந்துமதக் கொள்கைகளை பெருமிதத்துடன் பின்பற்றி வருபவர் என்பது நாடறிந்த ஒன்றாகும். மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள் மக்கள் குழப்பம் தீர்ந்து செயல்பட கூறிய அறிவுரையை இந்த நேரத்தில் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். ‘இறைவனே ஆத்திகர் அவரே நாத்திகர். அவரே நல்லவர் அவரே தீயவர். அவரே உண்மை அவரே உண்மை அற்றவர். மேலும் அவர் எல்லா நிலையையும் கடந்தவர். உண்மைகளை அறிந்து கொண்டால் எல்லாக் குழப்பங்களும் தீர்ந்து விடும்’. இதைக் கருத்தில் கொண்டு, **இந்தியாவின் பாதுகாப்பு கருதி தமிழர்களின் 150 ஆண்டு கால சேது சமுத்திரத் திட்டத்தை 2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளுக்கு முன்னதாக நிறைவேற்றி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை இந்திய பிரதமர் மோடி அவர்கள் பிடிக்க வேண்டுமென திமுக சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்**” என்று கடிதத்தை அரசியல், சென்டிமென்ட் ரீதியாக முடித்துள்ளார் டி.ஆர்.பாலு.
மோடி இந்தக் கடிதத்துக்கு என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்து திமுக-பாஜக கூட்டணி அமைந்தாலும் ஆச்சரியமில்லை என்பதையே இந்தக் கடிதத்தின் கடைசி பத்தி வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றன.
**-வேந்தன்**
�,”