சேலம் உருக்காலை படுக்கைகள் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

Published On:

| By Balaji

சேலம் உருக்காலையில் அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்துக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொரோனா தடுப்புப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். சேலம் உருக்கு ஆலையில், 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மையத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளை அமைத்து நாட்டிலேயே முதன்மை சிகிச்சை மையமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

இன்று, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “காவல்துறையினருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 65,000 தடுப்பூசிகள் இருப்பு உள்ளது.

சேலத்தில் 514 வாகனங்களில் 385 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 அரசு மருத்துவமனைகள், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேலத்தில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்பதற்கு முன்பாக இங்கு, 1983 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள், 1634 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் இருந்தன. தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் 2500 இருந்தன. தற்போது மொத்தம், 11,700 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் ஒரு நாள் கூடுதலாகவும், ஒரு நாள் குறைவாகவும் கொரோனா பாதிப்பு வருகிறது. சேலம் உருக்காலையில் ஏற்படுத்தப்பட்ட படுக்கைகளில் ஆக்சிஜன் டெஸ்டிங் நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவத் துறையினர் ஆய்வு மேற் கொண்டிருக்கின்றனர். இந்த பணிகள் முடிந்த பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் அட்மிஷன் போடப்படும். கொரோனா இல்லாத மாவட்டமாகச் சேலம் விரைவில் கொண்டுவரப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை அழைத்து கொரோனா பரவலைக் குறைக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் ஆலோசனை நடத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி சேலம் மாவட்டத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மூன்று வகையான கட்டணங்கள் தனியார் மருத்துவமனையில் வசூலிக்கப்படுகின்றது. அது தொடர்பான விளம்பரப் பலகைகளை வைக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பரிசோதனை செய்த 24 மணி நேரத்திற்குள் சோதனை முடிவை வெளியிட முடிவெடுத்துள்ளோம். அவர்கள் குறித்த தகவல்களை கண்காணிக்கும் அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு தொற்றாளர்களுக்கு அட்மிஷன் அளிக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள வார் ரூம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment