செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், இனிமேல் நேரடிமுறையில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வருகிற சூழ்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆன்லைனில் பாடம் நடத்தியதுபோன்று, ஆன்லைனிலேயே தேர்வுகளை நடத்த வேண்டும் என்றுக் கூறி மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று(நவம்பர் 15) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி மதுரை, ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் என்ன முடிவு எடுப்பதென்று தெரியாமல் கல்லூரி நிர்வாகம் குழப்பத்தில் இருந்தது.
தற்போது, இந்த பிரச்சினைக்கு உயர்கல்வித் துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதுகுறித்து இன்று(நவம்பர் 16) உயர்கல்வித் துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் மட்டுமே நடத்த வேண்டும். அரசு வெளியிட்டிருக்கக்கூடிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றியே நேரடி தேர்வு நடத்தப்படும்.
இந்த உத்தரவு பொறியியல், அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் என அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
**-வினிதா**
�,