ஊழல் நடந்திருந்தால் கண்டுபிடிக்கட்டும் : செல்லூர் ராஜூ

Published On:

| By Balaji

கனமழையால் சென்னை மாநகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் மழை நீர் வடிகால்வாய் சரிவரத் தூர்வாரப்படவில்லை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து மழைக்காலம் முடிந்ததும் வெள்ள பாதிப்பு குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் ஊழல் நடந்ததாக திமுகவினர் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தத் திட்டத்தை மாநில அரசு மட்டும் மேற்கொள்வதில்லை. மத்திய அரசின் குழுவினர் வந்து இது தொடர்பாக ஆய்வு நடத்தி சான்றிதழ் அளித்த பின்னரே நிதி ஒதுக்கீடு செய்வார்கள்.

இருந்தபோதிலும் ஊழல் நடந்து இருக்கிறது என்கிறார்கள். ஊழல் நடந்து இருந்தால் அதனைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இந்த அரசு விழித்துக் கொண்டு வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுகளை நடத்தி இருக்க வேண்டும். அதை தவிர்த்து விளம்பரத்துக்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே எதற்கெடுத்தாலும் கடந்த ஆட்சியின் மீதும் முன்னாள் அமைச்சர்கள் மீதும் குறை சொல்வதை விட்டுவிட்டு திமுகவினர் மக்கள் பணியில் தீவிரம் காட்ட வேண்டும். ஜேம்ஸ்பாண்ட் போல் முதல்வர் செயல்படுகிறார். ஷூட்டிங் நடந்தால் எப்படி பார்ப்பார்களோ அதுபோன்றுதான் முதல்வரை பொது மக்கள் பார்க்கிறார்கள். முதலமைச்சராக பார்க்கவில்லை” என்று விமர்சித்தார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share