ஓட்டுக்கு 2500 ரூபாய் ! அதிர வைக்கும் செல்லூர் ராஜு

Published On:

| By Balaji

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், சுதந்திர போராட்ட வீரர்களான கே.டி.கே.தங்கமணி, என்.சங்கரைய்யா போன்றவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பிய பெருமைக்குரிய தொகுதி மதுரை மேற்கு தொகுதி.

2016ல்அகில இந்திய அண்ணா திமுக வேட்பாளர் செல்லூர் கே.ராஜு, திமுக வேட்பாளர் கோ. தளபதி அவர்களை 16,398 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார். இத்தொகுதியில் மதுரை மாநகராட்சியின் 60 முதல் 72 வரையிலான 13 வார்டுகள் மற்றும் கோவில் பாப்பாகுடி, பரவை, விளாங்குடி, கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், துவரிமான், அச்சம்பத்து, காளவாசல், பழங்காநத்தம், ஜெய்ஹிந்துபுரம் ஆகியவை முக்கிய பகுதிகள் ஆகும்.

மதுரை மேற்கு தொகுதியில் முக்குலத்தோர், பிள்ளைமார் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக செட்டியார், யாதவர், ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறிஸ்தவர் மற்றும் பல்வேறு சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் முக்குலத்தோர் 30 சதவீதம் பேரும், பிள்ளைமார் சமூகத்தினர் 15 சதவீதம் பேரும் உள்ளனர். இருந்தபோதிலும் இந்த தொகுதி வாக்காளர்கள் அரசியல் ரீதியாகவே வாக்களித்து தங்கள் பிரதிநிதியை தேர்வு செய்து வந்துள்ளனர்

1967ல் சுதந்திர போராட்ட வீரர்கள் என்.சங்கரைய்யாவையும் 1971ல் மறைந்த கேடி.கே.தங்கமணியையும் சட்டமன்றத்துக்கு அனுப்பிய பெருமைக்குரியது. 1980ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனக்கு பாதுகாப்பான தொகுதி என எம்.ஜி.ஆர் போட்டியிட்ட தொகுதி மதுரை மேற்கு. தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்திற்கு பயணம் மேற்கொண்ட எம்.ஜி.ஆர் தான் போட்டியிட்ட மேற்கு தொகுதியில் சில மணி நேரங்களே பிரச்சாரம் செய்து வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1967 முதல் இதுவரை நடைபெற்ற சட்ட பேரவை தேர்தல்களில் ஏழு முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 2011, 2016 தேர்தல்களில் செல்லூர் ராஜு வெற்றிபெற்று அமைச்சரானார். கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தளபதி 16,398 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார். மக்கள் நல கூட்டணி சார்பாக சிபிஎம் வேட்பாளர் வாசுகி பெற்ற 19, 991 வாக்குகள் செல்லூர் ராஜு வெற்றிக்கு காரணமாகி போனது. இந்த முறை தொகுதி மாறி போட்டியிட செல்லூர் ராஜு கடுமையாக முயற்சித்தும் அதிமுக தலைமை அதற்கு அனுமதிக்காததால் மதுரை மேற்கு தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டிய சூழலில் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்கிற முனைப்புடன் பிரச்சாரம் செய்வதை காட்டிலும் கரன்சியை நம்பி அவருக்கான தேர்தல் பணிக்குழு பம்பரமாக பணியாற்றி வருகிறது.

திமுக சார்பில் சின்னம்மாள், தேமுதிக சார்பில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பாலசந்தர், நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றிக்குமரன், மக்கள் நீதி மையம் சார்பில் முனியசாமி என ஏழு வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், போட்டி அதிமுக- திமுக இடையேதான். மேற்கு தொகுதியில் இடதுசாரிகள் திமுக – அதிமுகவிற்கு அடுத்தபடியாக பலம் மிக்கவர்களாக இருப்பதால் சென்ற தேர்தலில் போட்டியிட்ட தளபதிக்கு வாய்ப்பு வழங்கி இருந்தால் உதயசூரியன் வெற்றி இந்நேரம் நிச்சயப்படுத்தபட்டிருக்கும் என்பதே திமுக கூட்டணி கட்சிகளின் கருத்தாக இருக்கிறது.

ஆனால் திமுக தரப்பில், செல்லூர் ராஜு அளவுக்கு பிரபலமில்லாத சின்னம்மாள் வேட்பாளராக போட்டியிடுவது போட்டியை கடுமையாக்கி உள்ளது. மதுரை’மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் தேர்தல் செலவை திமுக தலைமை ஏற்றுக்கொண்டுள்ள ஒரே தொகுதி மதுரை மேற்கு தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக முதல்வரையே தேர்வு செய்த தொகுதி என்றாலும் இன்றுவரையிலும் தொகுதி நகரமாகவும் இல்லாமல் கிராமமாகவும் இல்லாமல் நடுவாந்திரமாகவே எந்த வளர்ச்சியும் இல்லாத சவளை பிள்ளையாகவே இன்றுவரை இருந்து வருகிறது என்கின்றனர் தொகுதி மக்கள். விவசாயம், கைத்தறி நெசவு, சிறு குறு வணிகம் ஆகியவை முக்கிய தொழில்கள் ஆகும். இவைதான் அங்கு வசிக்கும் மக்களுக்கு பொருளாதார சக்தியாக விளங்குகிறது. மதுரை மேற்கு தொகுதியில் குறிப்பிடத் தக்க அளவில் தொழிற்சாலைகள் இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது.

இந்த தொகுதியில் பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றி தரப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளாக இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு தமிழக அமைச்சராக இருந்தபோதிலும் தன்னை வளப்படுத்திக்கொள்ள தவறவில்லை. தனது கோமாளி தனமான நடவடிக்கைகளால் உலக தமிழர்கள் மத்தியில் பிரபலமான செல்லூர் ராஜு தொகுதியின் வளர்ச்சிக்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதே அவருக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தபடுகிறது. இவை எவற்றுக்கும் அசராத செல்லூர் ராஜு தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும்” எனது கரங்கள் கரன்சி கட்டை

வைத்து தேர்தல் வெற்றியை வாங்கிவிடும் என்கிற வியூகத்தை அமைத்து செயல்படுத்தி வருவது எதிர்தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

** என்ன வியூகம் என்ன கரன்சி கட்டு**

பத்தாண்டுகாலம் அமைச்சராக இருந்தபோதுகூட செல்லூர் ராஜு இந்தளவுக்கு புத்திசாலித்தனமாக மக்களோடு நெருக்கமாகி களப்பணியாற்றியதில்லை. ஆனால் தேர்தல் பணிகளில் அவருக்காக திட்டமிடுவோர் நவீன தொழில்நுட்பத்தை அவ்வளவு அற்புதமாக பயன்படுத்துகின்றனர் என்கிறார்கள். தொகுதியில் உள்ள மொத்த வாக்களர்கள் 3,05,165 இதனை 30 குடும்ப அட்டைதாரர்களாக பிரித்து அவர்களின் மொபைல் எண்ணை கடந்த ஆறு மாத காலத்தில் சேகரித்துள்ளது. ஒவ்வொரு குடும்ப அட்டையிலும் உள்ள குடும்ப தலைவர் அல்லது முடிவெடுக்கும் அதிகாரமுள்ளவரின் மொபைல் எண்களை தனிப்பட்டியலாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. 30 குடும்ப அட்டைகளுக்கு ஒரு பொறுப்பாளர் அவர்களை கண்காணிக்க பத்து பொறுப்பாளருக்கு ஒரு மேற்பார்வையாளர் இவர்களை கண்காணிக்க தொகுதி பொறுப்பாளர் என வகைப்படுத்தி தேர்தல் பணியாற்றுகின்றனர். இவர்களது பணி ஒவ்வொரு குடும்ப தலைவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு செல்லுார் ராஜுவுக்கு வாக்களிக்க வேண்டுகோள் வைப்பதுடன் அதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை கூறி உடன்படுபவர்களின் பட்டியலை தேர்தல் தேதிஅறிவித்த சில தினங்களில் பட்டியலை தயாரித்துள்ளனர். அதன் அடிப்படையில் கரன்சியைடோர் டெலிவரி செய்துள்ளனர். இவை சரியாக சிந்தாமல் சிதறாமல் வாக்களருக்கு சென்றடைந்ததா என்பதை டெலிவரி பட்டியல் தொகுதி பொறுப்பாளருக்கு கிடைத்தவுடன் அவருக்கு கீழ் பணியாற்றும் பொறுப்பாளர் குடும்ப தலைவரை தொடர்பு கொண்டு வாக்காளர் எண்ணிக்கை அதற்குரிய தொகை சரியாக வந்தடைந்ததா என்பதை உறுதிப்படுத்துகிறார். சொன்னபடி வாக்களித்துவிட வேண்டும் என்பதை வேண்டு கோளாக வைப்பதுடன் தவறும்பட்சத்தில் வாக்களிக்காதவருக்கான பணத்தை திரும்ப கொடுத்துவிட வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். யாருக்கு வாக்களிக்கின்றனர் என்பதை காட்டிலும் கை நீட்டி வாங்கிய எண்ணிக்கை 100% வாக்குசாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றனர்

தொகுதியில் உள்ள 3,05,165 வாக்காளர்களில் விளிம்புநிலை மனிதர்கள், அன்றாடங்காய்ச்சிகள், தலித் மக்கள் குறிவைத்து ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறார்கள் சுமார் ஒரு லட்சத்தி ஐம்பது ஆயிரம் மக்களை மட்டும் கரன்சி கவனிப்பால் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்கிற நம்பிக்கையில் செல்லூர்ராஜு இருக்கிறார் என்கின்றனர் அவரது தரப்பில் வாக்காளருக்கான சன்மான தொகை குறைந்தபட்சம் 1000ம் முதல் 2500 ரூபாய் வரை வழங்கப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது.

**-இராமானுஜம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel