‘மனைவியை மீட்டுத் தாருங்கள்’: கலங்கும் செல்வன்

Published On:

| By Balaji

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட இளம்பெண் இளமதி 3 நாட்களாகியும் இதுவரை மீட்கப்படவில்லை.

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியைச் சேர்ந்த செல்வனும், குரும்பாநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இளமதியும் கடந்த 9ஆம் தேதி சேலம் மாவட்டம் காவலாண்டியூரிலுள்ள பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் முன்னிலையில் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர். அன்று இரவு கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அங்கு சென்ற சாதி அமைப்புகளைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்டோர், திருமணத்தை நடத்திவைத்த திவிக தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகளையும், காதல் தம்பதியையும் கடுமையாகத் தாக்கினர். அத்தோடு, மணமகள் இளமதியையும் கடத்திச் சென்றனர்.

இதுதொடர்பாக செல்வன் அளித்த புகாரின் பேரில் மணப்பெண் இளமதியின் தந்தை ஜெகநாதன், பெரியப்பா, மாமா உள்ளிட்ட 18 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திவிக நிர்வாகி காவை ஈஸ்வரன் அளித்த புகாரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்தவர்களை காவல் துறையினர் ஓமலூர் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

முதல்வரின் மாவட்டமான சேலத்தில் திருமணமானவுடன் மணப்பெண் கடத்தப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 9ஆம் தேதி இரவு கடத்தப்பட்ட இளமதி எங்கே இருக்கிறார், என்ன ஆனார் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. முகநூலில் இளமதி எங்கே என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி பலரும் அவரை கண்டுபிடித்து மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.

விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், “சாதி வெறியர்களால் கடத்தப்பட்ட இளமதியை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை மணப்பெண்ணை மீட்க முடியாமல் இருப்பதற்கு அமைச்சர் ஒருவரின் தலையீடே காரணம் எனத் தெரிகிறது. முதலமைச்சர் தலையிட்டு இளமதியை மீட்கவும் மணமக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவணக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வன், காவை ஈஸ்வரன் ஆகியோர் இன்று (மார்ச் 12) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

என்னதான் நடந்தது என்பதை அறிய மணமகன் செல்வனைத் தொடர்புகொண்டு பேசினோம்…“இளமதி வீட்டிலிருந்து ஆயுதங்களுடனும் வாகனங்களில் வந்துள்ளனர் என்று தெரிந்ததுமே நான் இளமதி, திவிகவைச் சேர்ந்த பரத் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வேறு இடத்திற்குச் சென்றோம். நாங்கள் செல்வதை தெரிந்துகொண்டு காரில் பின் தொடர்ந்து வந்தவர்கள் எங்களது வாகனத்தை இடித்துத் தள்ளினர். என்னையும், பரத்தையும் அனைத்து இடங்களிலும் தாக்கி துன்புறுத்தியதோடு, சாதி பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டினர். இன்னும் கொஞ்சம் அதிகமாக அடிபட்டிருந்தாலும் இந்நேரம் உங்களிடம் பேசியிருக்கவே முடியாது. என்னிடம் இருந்த செல்போன், 15,000 ரூபாய் பணத்தையும் பிடுங்கிக்கொண்டு கிளம்பிவிட்டனர்” என்று விவரித்தவர்,

“அதையெல்லாம் விட என் கண் முன்பே எனது மனைவி இளமதியை அடித்துத் துன்புறுத்தி தரதரவென தரையில் இழுத்துச் சென்று ஆம்னி வேனில் ஏற்றிக்கொண்டு கிளம்பினர். இதுவரை என்னால் அந்த பாதிப்பிலிருந்து மீள முடியவில்லை. என் மனைவியை அழைத்துச் சென்ற காட்சி மட்டும்தான் இன்னும் எனது மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது” என்று கலங்கினார்.

மேலும், தனது மனைவி இளமதியை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர்களால் தங்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படக் கூடாது என உத்தரவாதம் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பிய தருமபுரி எம்.பி செந்தில்குமார், “தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி-செல்வன் ஆகியோர் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். திருமணமான நிலையில் இளமதி மட்டும் கடத்தப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. ஆனால், காவல் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சர் தலையிட்டு உடனடியாக இளமதியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இளமதியை மீட்கும் நடவடிக்கைகள் என்ன நிலைமையில் இருக்கிறது என்பதை அறிய கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சக்கரபாணியிடம் பேசினோம்… “குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் தந்தை உள்ளிட்டோரை கைது செய்து ரிமாண்டில் வைத்துள்ளோம். மணப்பெண் இளமதியை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தீவிரமாகத் தேடி வருகிறோம். இதில் தொடர்புடைய நபர்களின் செல்போன் எண்களை டிரேஸ் செய்து வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் பெண்ணை மீட்டுவிடுவோம்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

**-த.எழிலரசன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share