Uரஜினி முடிவு: வரவேற்கும் சீமான்

Published On:

| By Balaji

ரஜினியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அரசியல் வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியல் மாற்றத்திற்காக 3 புதிய திட்டங்களை வகுத்திருப்பதாகத் தெரிவித்தார். தான் முதலமைச்சர் ஆகாமல், நல்லவர் ஒருவரை முதல்வராக்குவேன் என்றும், கட்சித் தலைவராக இருந்து ஆட்சியில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுவேன் என்றும் கூறியவர், மக்கள் எழுச்சி உண்டான பிறகு அரசியல் கட்சியைத் தொடங்குவேன் என்றும் தெரிவித்தார். ரஜினி முதல்வராக மாட்டேன் என்று சொன்னது அவரது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம். இதே போன்று தான்,அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத் தூய்மையோடும் போராடிவருகிறோம். அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

எனினும், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ரஜினிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தஞ்சையில் இன்று (மார்ச் 12) பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ரஜினி அரசியலுக்கு வருவது என்பது சுயநல நோக்கம் கொண்டது, சுனாமியால் கடற்கரையோர கிராமங்கள் அடியோடு அழிந்தது. பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அழிந்தது. கஜாபுயல், ஓகி புயல் மற்றும் வரலாறு காணாத வறட்சியால் மக்கள் செத்து மடிந்த போது வாய் திறந்து ஆறுதல் சொல்ல மறுத்தவர். காவிரி உரிமைக்கான 50 ஆண்டுகாலப் போராட்டத்தில் ரஜினி பங்கேற்க மறுத்து விட்டார்” என்று விமர்சித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தண்ணீர் தர கர்நாடகம் மறுக்கிறதே?ரஜினி தட்டிக் கேட்கத் தயாரா? தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டரே அதற்கு நீதி கேட்கத் தயாரா? ராஜபக்‌ஷேவுடன் நட்புறவு கொள்வது துரோகமில்லையா? மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் லட்சக்கணக்கில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கோடிக் கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதே நியாயம் கேட்கத் தயாரா? என்றெல்லாம் ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ள பி.ஆர்.பாண்டியன்,

“மக்களுக்கான வாழ்வாதார உரிமைப் போராட்டத்தில் பங்கேற்காத ரஜினி போன்ற சுயநலவாதிகள் தனது 70 வயது கடந்து ஓய்விற்கு அரசியல் இயக்கம் தொடங்குவதை ஏற்க மாட்டோம். ரசிகர்கள் என்ற போர்வையில் இளைஞர்களிடம் பொய் பிரச்சாரம் செய்து ஏமாற்றுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share