ரஜினி அரசியலுக்கு வராமலும் தமிழக மக்களுக்கு நன்மை செய்யலாம் என சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் தனது அரசியல் கட்சியைத் துவக்க இருக்கிறார். தற்போது கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நியமனம் செய்தார்.
மேலும், தன்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வரும் ரஜினிகாந்த், “தமிழக மக்களின் பிரார்த்தனையால்தான் நான் உயிர்பிழைத்து வந்தேன். அவர்களுக்காக எனது உயிரே போனாலும் பரவாயில்லை…சந்தோஷம்தான்” என்று கூறியிருந்தார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருடன் ரஜினியை ஒப்பிட்டும் சிலர் பேசுகிறார்கள். எம்.ஜி.ஆர் அளித்த நல்லாட்சியை ரஜினிகாந்தும் தருவார் என அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “என்னை வாழ வைத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ரஜினி கூறுகிறார். அரசியலுக்கு வந்துதான் அதனை செய்ய வேண்டும் என்பதில்லையே. சொத்தில் பாதியை எழுதிவைத்தாலே போதுமே. அரசியலில் ஈடுபடாமல் நேரடியாக தேர்தலில் நின்று முதல்வராக வேண்டும் என ரஜினி நினைக்கிறார்.
ரஜினியின் பிறந்தநாளான நேற்று அவர்போல வேடமிட்ட 10 பேர் நடித்துக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் ரசித்து கைதட்டுகிறார்கள். இந்த காலத்திலும் மண் சோறு சாப்பிடுவதை என்னவென்று சொல்வார்கள். அதை தடுப்பதற்கு ரஜினி என்ன செய்தார்?” என கேள்வி எழுப்பினார்.
எம்.ஜி.ஆரையும் ரஜினியையும் ஒப்பிடுகிறார்களே என்ற கேள்விக்கு, “எம்.ஜி.ஆர் இல்லை என்பதால் அவருடன் ரஜினியை ஒப்பிடுகிறார்கள். அவர் உயிரோடு இருந்திருந்தால் அப்படி சொல்கிறவர்களை கொன்றிருப்பார். எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கியவர்தானே ரஜினி. எம்.ஜி.ஆர் தன்னை கட்டிவைத்து அடிக்கும்போது அதில் தலையிட்டு காப்பாற்றியவர் கலைஞர்தான் என்று ரஜினியே ஒரு பேட்டியில் கூறுகிறார். எம்.ஜி.ஆர் ஏன் கட்டிவைத்து அடித்தார் என ஒருமுறை ரஜினியிடம் கேளுங்கள். எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் மறுபடியும் தோட்டத்துக்கு அழைத்து அடித்திருப்பார்” என்று தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்தார் சீமான்.
**எழில்**�,