ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப்-காவி சால்வை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று ஐந்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை முதலில் தனி நீதிபதி அமர்வும், அதன்பின்பு மூன்று நீதிபதி அமர்வும் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை நேற்று(பிப்ரவரி 10) விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு,” பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கிறோம். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், தீர்ப்பு வரும்வரை மாணவர்கள் எந்தவிதமான மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து செல்ல அனுமதியில்லை” என்று வாய்மொழியாக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.
இதையடுத்து கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் 9,10 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி மாணவர்கள் யாரும் மதம் சார்ந்த ஆடைகளை அணிந்துவரக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
இன்று(பிப்ரவரி 11) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு மாணவிகளின் மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்பட்டது.
அப்போது மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவதத் காமத், “மாணவர்கள் எந்தவொரு மத அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஆடை அணிந்து செல்ல உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இது முஸ்லிம்களுக்கு மட்டுமில்லாமல், மற்ற மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்து வருவார்கள். அவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தடை உத்தரவு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25கீழ் சொல்லப்பட்டுள்ள உரிமைகள் முழுமையாக பறிக்கப்படுவதைக் குறிக்கிறது” என்று வாதாடினார்.
“உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து எங்களுக்கு தெரியாது” என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.
இதையடுத்து ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உயர்நீதிமன்றம் உத்தரவு இன்னும் வெளியாகவில்லை” என்று கூறினார்.
“இந்த விஷயங்களை பெரிய அளவில் தேசிய பிரச்சனையாக்க வேண்டாம்” என்று தலைமை நீதிபதி கூற,
“அரசியலமைப்பு ரீதியாக உயர் நீதிமன்றம் முடிவெடுக்கட்டும்” என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
“மேத்தா காத்திருங்கள்” என்று குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “கர்நாடக மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்களும் கவனித்து வருகிறோம். இந்த விவகாரத்தை தேசிய அளவில் கொண்டு வர வேண்டுமா என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். இதனால் சில தேர்வுகள் தடைப்பட்டால், உரிய நேரத்தில் நாங்கள் தலையிடுவோம்” என்று கூறினார்.
“தேர்வுகள் வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது. ஹிஜாப் மற்றும் தேர்வு ஆகிய இரண்டில் எதை தேர்வு செய்வது என்று தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதனால் வழக்கை திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்” என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, “தேவையான நேரத்தில், இந்த வழக்கு மீது நாங்கள் விசாரணை நடத்துவோம்” என்று கூறி முடித்துவிட்டார்.
முன்னதாக, ஹிஜாப் தொடர்பான வழக்குகளை அவசர வழக்ககாக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் கபில் சிபில் வைத்த கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**