திடீர் ஆய்வு: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

politics

கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைனிலேயே வகுப்புகள் நடைபெறுகின்றன. எனினும் தனியார் பள்ளிகள் 100 சதவீத கட்டணத்தை வசூலிப்பதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் தான் வசூலிக்க வேண்டும், அதுவும் இரண்டு தவணையாகப் பிரித்து வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

ஆனாலும் பல தனியார் பள்ளிகளில் 100 சதவீத கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் 100 சதவீத கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார்.

திருச்சி அருகே எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஜூன் 28) ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளியில் கழிப்பறை, வகுப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அப்பள்ளியில் 100வது மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்து பாடப்புத்தகங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளியில் படிப்பதை வறுமையாக நினைக்காமல் பெருமையாக அனைவரும் கருதவேண்டும். தனியார் பள்ளிகளிலிருந்து அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்து வருவதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்துப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். எனவே அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பணிகளைத் தமிழக அரசு நிச்சயம் மேற்கொள்ளும்.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். இதில் அதிக கட்டணம் தொடர்பான புகார் உண்மை என கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அறிவித்தபடி நிதிநிலை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.

அதுபோன்று, மண்ணச்சநல்லூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் வகையில் மதிய உணவுத் திட்டத்தில் வாழைப்பழத்தைச் சேர்ப்பது, அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது உள்ளிட்டவை அடங்கிய அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.