சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான அமைச்சர் உதயகுமாரின் விமர்சனத்துக்கு திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பதிலளித்துள்ளார்.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, “சிபிஐ எனச் சொல்லிவிட்டால் இந்த விவகாரத்தைக் கைகழுவி விடலாம் என்று முதல்வர் நினைத்திருக்கிறார். மேலும் சிபிஐ ஒன்றும் வானத்தில் இருந்து குதித்து வரவில்லை. மத்திய அரசாங்கத்தின் கீழ்தான் வருகிறது என எண்ணியிருக்கக் கூடும்” என்று குற்றம்சாட்டினார்.
காவலருக்கே பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிடுவதாகக் குறிப்பிட்ட ராசா, “இந்த உத்தரவைப் பிறப்பித்த பிறகு முதல்வர் நியாயமாகப் பதவி விலகியிருக்க வேண்டும்” என்றும் சாடியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் நேற்று (ஜூலை 5) அறிக்கை வெளியிட்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக தலைவர் ஸ்டாலின் குட்கா விவகாரம், குரூப்-1 முறைகேடு, தாதுமணல் குவாரியில் நடைபெற்ற முறைகேடுகள், நீட் தேர்வு ஆள் மாறாட்ட முறைகேடு விவகாரம், சாத்தான்குளம் கொலை வழக்கு ஆகியவற்றுக்கு சிபிஐ விசாரணை கேட்டு அறிக்கை வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா சிபிஐ விசாரணை குறித்துக் கூறியவை ஸ்டாலின் ஒப்புதலோடு வெளியிட்டதா அல்லது அவரே சொந்தமாக வெளியிட்டாரா எனக் கேள்வி எழுப்பிய அவர், “எதற்கெடுத்தாலும், மாநில அரசின் மீது நம்பிக்கையில்லை, எங்களுக்கு சிபிஐ விசாரணைதான் தேவை என்று பல சந்தர்ப்பங்களில் திமுகவும், அதன் தலைமையும் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், ஆ.ராசா சிபிஐ விசாரணை வேண்டாம் என்று பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது” என்று சாடினார்.
சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றுதான் சிபிஐ வசம் விசாரணையை ஒப்படைக்க வேண்டுமென்று முதல்வர் தெரிவித்ததாகக் கூறியவர், “உங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் சிபிஐ விசாரணைதான் வேண்டுமென்று கேட்டால், அதை நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்கள். தமிழக அரசு சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சொன்னால், அதை நீங்கள் எதிர்ப்பீர்களா” எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு அரசு இவ்வழக்கை சரியான முறையில் விசாரணை மேற்கொள்வதால், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ராசா இவ்வாறும் பேசியுள்ளதாகவும் உதயகுமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
**ஆ.ராசா பதில்**
தகுதியற்றவர்களின் தகுதி விரைவில் தீர்மானிக்கப்படும் என்று கூறி இதற்கு பதிலளித்துள்ள ஆ.ராசா, “சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மூலமாக புலன் விசாரணையை மேற்கொண்டதில்தான், நடைபெற்றது கொடூரமான கொலை என்று தெரியவந்தது. அதுவரை தமிழக முதலமைச்சரைப் பொறுத்தவரை இது மூச்சுத்திணறல் மற்றும் வயோதிகம் காரணமாக ஏற்பட்ட இயற்கை இறப்பு என்றே சொல்லப்பட்டது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரே, கொடூரமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையை மறைத்து இயற்கையான மரணம் என்று சொன்னால் கொலையை மறைத்த குற்றத்திற்காக அவரே குற்றவாளியாகிறார்.
எனவே, குறைந்தபட்சம் தார்மீக பொறுப்பேற்று உள்நோக்கத்தோடு கொலையை மறைக்கும் வகையில் பொய்யான செய்தியை வெளியிட்ட முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்று நான் குறிப்பிட்டேன்” என்று கூறியுள்ளார்.
இதுவரை தான் சொன்ன பச்சைப் பொய் குறித்து முதலமைச்சர் மன்னிப்பு கோரியதாகவோ, வருத்தம் தெரிவித்ததாகவோ தெரியவில்லை என்று விமர்சித்துள்ள அவர், “12000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு கண்ணாடியிழைக் கம்பி (Optic Fiber Cable) இணைப்புகள் அமைப்பதற்காக சுமார் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்ட திட்டத்திற்கான ஒப்பந்தத்தையே இரத்து செய்திருப்பது உதயகுமாரின் நேர்மைக்கு கொடுக்கப்பட்ட பட்டயம்” என்றும் கூறியுள்ளார்.
மேலும், “தன் மீதான ‘பாரத் நெட்’ ஒப்பந்த முறைகேட்டில் மத்திய அரசுக்கு பணிந்து தன் பதவியை எடுத்து விடுவாரோ என்ற பயத்தில் எடப்பாடிக்காக உதயகுமார் பேசுவதில் நமக்கொன்றும் வியப்பில்லை. அணையப்போகும் திரி கடைசி நிமிடத்தில் கூடுதல் வெளிச்சம் காட்டுவது மாதிரி உதயகுமாரின் பேச்சு உரைத்து ஒலிக்கிறது. விரைவில் அமைய இருக்கும் தி.மு.க. ஆட்சியில் தகுதியற்ற இவர்களின் தகுதி தக்க நேரத்தில் தீர்மானிக்கப்படும். அதுவரையாவது இவர்கள் அமைதி காப்பது அவர்களுக்கு நல்லது” என்றும் ஆ.ராசா உதயகுமாருக்கு பதிலளித்துள்ளார்.
**எழில்**�,