சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.கள் உள்ளிட்ட போலீஸாரை போலீஸ் காவலில் எடுக்கவும் இன்று அனுமதி கிடைத்திருக்கிறது. சிபிஐ விசாரணையைத் தொடங்கும் முன்னரே சம்பந்தப்பட்ட போலீசார் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டனர்.
தேசிய மனித உரிமை ஆணையம் தாண்டி ஐ.நா. சபை வரை விவாதப் பொருளான இந்த வழக்கில் சிபிஐ விசாரணை எப்படிப் போகும் என்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினரிடையேயும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டத்துக்காக சென்னை வந்த அமைச்சர்களில் சிலர் கூட்டத்துக்கு முன்பே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள், “சாத்தான்குளம் விவகாரத்துல நம்ம கவர்ன்மெண்ட்டுக்கு ரொம்ப கெட்ட பெயர் ஆகிடுச்சுங்க. அதுலையும் அவர் நெஞ்சுவலியால மூச்சுத் திணறலாலதான் இறந்தாங்கனு நீங்க சொன்னது ரொம்ப சீரியசா போயிடுச்சு. நீங்க அதை சொல்லாம இருந்திருக்கலாம்” என்று ஒரு அமைச்சர் சொல்ல, இன்னொரு அமைச்சர், “எல்லா அரசியல்வாதிகளும் சாத்தான்குளம் வந்துட்டுப் போயிட்டாங்க. நீங்களும், துணை முதல்வர் அண்ணனும் சேர்ந்து சாத்தான்குளம் வர்ற மாதிரி பேசிக்கிட்டாங்க. ஆனா கடைசியில அந்த ப்ரொக்ராம் கேன்சலாயிடுச்சு சொல்லிக்கிடுதாங்க. நீங்க ஒரு தாட்டி அங்க வந்திருக்கலாம்” என்றும் எடப்பாடியிடம் தெரிவித்திருக்கிறார்,
அதற்கு எடப்பாடி சொன்ன பதில் அமைச்சர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
“அதெல்லா நமக்கு ஒரு பிரச்சினையும் வராதுங்க. மக்கள் எதிர்ப்பும் இருக்காது பாருங்க. இந்த கேஸ்ல நாம சிபிஐ கேட்டிருக்கோம். சிபிசிஐடி விசாரணை நடந்துக்கிட்டிருக்கும்போது போலீசாரை கைது பண்ணியாச்சு. மதுரை ஹை கோர்ட்டே சிபிசிஐடி போலீஸை பாராட்டியிருக்கு. ஆனாலும் நாம சிபிஐ விசாரணைக்கு கொடுத்திருக்கோம். சிபிசிஐடி விசாரணை நடத்தி, முடிவுல நான் சொன்ன மூச்சுத் திணறல், நெஞ்சுவலி காரணத்தை சொன்னுச்சுன்னா நம்ம சொல்லிதான் விசாரணை முடிவை மாத்திட்டாங்கனு எதிர்க்கட்சிகள் எல்லாரும் சொல்லுவாங்க.
உண்மை என்னன்னா… இறந்து போன பெரியவர் ஜெயராஜுக்கு ப்ரஷர் இருந்திருக்கு, சுகர் ரொம்ப அதிகமா இருந்திருக்கு. அந்த பையன் பென்னிக்ஸ் 120 கிலோ எடை உள்ளவரு, அவரும் ப்ரஷர் மாத்திரை எடுத்துக்கிட்டிருந்தவர்தான். அங்க போலீஸ் ஸ்டேஷன்ல சாதிப் பிரச்சினை இருந்திருக்கு. இவங்களை ஸ்டேஷனுக்கு கூட்டிக்கிட்டு போனபோது ஸ்டேஷன்ல ஒரு போலீஸ் காரரை சாதி பேரை சொல்லி ஜெயராஜ் திட்டிருக்காரு. அந்த கோபத்துல அந்த போலீஸ்காரு இவங்கள அடிச்சிருக்காரு. ரெண்டு பேருக்கும் தோல் ரொம்ப வீக்கா இருந்திருக்கு. ஆசனவாய்க்குள்ள லத்திய விட்டார்னு சொல்றதெல்லாம் இல்ல. பின்பக்கம்தான் அடிச்சிருக்காங்க. அந்த பையன் பென்னிக்ஸ் ஒரு எஸ்.ஐ.யை அடிச்சதால சாதி பேர சொல்லி திட்டினதை விட போலீஸை அடிச்சிட்டான்ற கோபத்துல மத்த போலீஸ்காரங்களும் சேர்ந்து அடிச்சிருக்காங்க. ஆஸ்பத்திரில சேக்கும்போது கூட ஆபத்தா எதுவும் இல்லை.
அதனால் நான் முதல்ல சொன்னதுதான் சிபிஐ விசாரணை முடிவுல வரும் பாருங்க. சிபிசிஐடி விசாரணையில் இதே முடிவு வந்துச்சுன்னா நம்மோட செல்வாக்குப்படிதான் விசாரணை நடந்துச்சுன்னு விமர்சனம் பண்ணுவாங்க. அதையே சிபிஐ சொன்னா எல்லாம் தெளிவாயிடும். சிபிஐ என்ன நாம சொல்லியா கேப்பாங்க? அதனால இதுல நாம கவலைப்பட எதுவுமில்லை” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரிவாக விளக்க இதைக் கேட்டுத்தான் அமைச்சர்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
-ராஜ்
�,