எனக்கும் சசிகலாவுக்கும் ஒரே நோக்கம்தான்: தினகரன்

Published On:

| By Balaji

எனது நோக்கமும் சசிகலாவின் நோக்கமும் ஒன்றுதான் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் அமமுக நிர்வாகியின் உயிரிழப்புக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை இன்று (ஜூலை 27) சந்தித்தார்.

அப்போது, “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதே அம்மாவின் உண்மையான இயக்கத்தை மீட்டெடுப்பதற்குத்தான். தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் எங்களுக்கு தடை ஏற்படுத்த முடியாது. அதை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருப்போம்”என்றார்.

”எடப்பாடி, ஓ.பன்னீர், சசிகலா ஆகியோரை ஒன்றுபடுத்த பாஜக முயற்சி மேற்கொண்டிருப்பதாக வரும் செய்திகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?”என்று கேட்டதற்கு, “யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என்றார் தினகரன்.

அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியே சென்றுகொண்டிருப்பது குறித்த கேள்விக்கு,

“அமமுகவில் கொள்கைக்காக என்னோடு வந்தவர்கள் என்னுடன் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பார்கள். சுயநலத்தோடு வந்தவர்கள், விலை போகக் கூடியவர்கள் போய்க் கொண்டுதான் இருப்பார்கள். அதையெல்லாம் தாண்டித்தான் ஓர் அரசியல் இயக்கம் பயணிக்க வேண்டும். எங்கள் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருப்போம்”என்று பதிலளித்தார்.

“சசிகலா அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வருவாரா?” என்று கேட்கப்பட்டதற்கு, “அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்பதுதான் சின்னம்மாவின் முயற்சி. என்னுடைய முயற்சியும் அதுதான். புரட்சித் தலைவர் கட்சியை ஆரம்பித்ததில் இருந்து புரட்சித் தலைவர், அம்மா, சிறைக்கு செல்லும் வரை சின்னம்மா ஆகியோர்தான் ஒற்றைத் தலைமையாக இருந்து வந்தார்கள். இப்போது மாறியிருக்கிறது.எல்லாம் மீண்டும் சரியாகும்” என்றார் தினகரன்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share