சசிகலா, தினகரன் அதிமுகவில் சேர வாய்ப்பே கிடையாது: டெல்லியில் எடப்பாடி

Published On:

| By Balaji

பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 19) சந்தித்தார். அப்போது தமிழகத்துக்குத் தேவையான பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவி குறித்து மனு அளித்தார்.

பிரதமருடன் சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களைத் துவக்கி வைக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடியை தமிழகத்துக்கு அழைத்திருப்பதாகவும், அவர் வருவதாக சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டைத் தாக்கிய புயல்களால் ஏற்பட்ட பாதிப்புக்கும், கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர் மழையால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கும் நிவாரணம் கேட்டு அழுத்தமாக கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறினார். இதுபற்றி நேற்று மின்னம்பலத்தில், ‘விவசாயக் கடன் ரத்து;எடப்பாடி டெல்லி பயணத்தின் மெகா திட்டம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

மேலும் அமித் ஷா, மோடி ஆகியோர் உடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை என்றும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பேசியதாகவும், அரசியல் பேச இப்போது நேரமில்லை என்றும் தெரிவித்தார் முதல்வர்.

“விடுதலையாகி வெளியே வரும் சசிகலா அதிமுகவில் சேர வாய்ப்பிருக்கிறதா?” என்ற கேள்விக்கு,

“ஒண்ணும் வாய்ப்பே இல்லை.அவர்கள் அதிமுக கட்சியில் இல்லை. நூறு சதவிகிதம் வாய்ப்பே இல்லை” என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.

“சசிகலாவை மீண்டும் சேர்த்துக் கொள்ள பாஜக நிர்பந்தம் கொடுக்கிறதா?” என்ற கேள்விக்கு,

“யார் சொன்னது… யார் சொன்னாங்க. அதெல்லாம் கிடையாது. அப்படிப்பட்ட பேச்சுவார்த்தையே கிடையாது. நாங்க சந்தித்தது தமிழகத்தின் வளர்ச்சிக்காகத்தான் ” என்றார் முதல்வர்.

மேலும் தினகரன் பற்றிய கேள்விக்கு, “ அவரது கட்சியில் அவர் மட்டும்தான் இருக்கிறார். இன்னும் சில பேர்தான் இருக்கிறார்கள். மற்ற அனைவரும் அதிமுகவுக்கு வந்துவிட்டார்கள். அவரையே அம்மா பல காலம் நீக்கி வைத்திருந்தார். அம்மா மறைவுக்குப் பிறகுதான் அவருக்கு பதவி கொடுத்தார்கள். அம்மா இருக்கும்போதே அவர் கட்சியிலேயே கிடையாது”என்று தினகரனை பற்றியும் தீர்மானமாக பதில் சொன்ன முதல்வர், ‘நன்றி வணக்கம்’ என்று சொல்லி பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டார்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share