முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியின்றி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்குகள் மூலமாகவே தேர்ந்தெடுப்பார்கள்” என்று அதிமுகவின் சட்ட விதி 20 (அ) 2 திருத்தியமைக்கப்படுகிறது. இந்த விதியை மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை” என்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சசிகலா தன்னை மீண்டும் மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் என அறிக்கைகள் மூலம் அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒரு ஐந்து பேர் கூடி முடிவெடுத்து தன்னை திமுகவிலிருந்து நீக்கியதை மனதில் வைத்துத்தான், அனைத்து அடிப்படை தொண்டர்களும் ஏற்றுக்கொண்ட ஒருவரால்தான், தனது கட்சியைச் சிறப்பாக வழி நடத்த முடியும் என்று கருதிய புரட்சித் தலைவர், பொதுச்செயலாளர் என்ற பதவிக்குப் போட்டியிட விரும்புபவர்கள் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற தனித்துவமான ஒரு சட்ட விதியை நாட்டிலே வேறு எந்த கட்சியிலும் இல்லாத ஒரு விதியை உருவாக்கினார்.
இதுதொடர்பாக புரட்சித்தலைவர் ஒரு கழக நிகழ்ச்சியில் அன்றைக்குப் பேசும்போது, “மிகப்பெரிய பொறுப்பை ஏற்கும் பொதுச்செயலாளர் பதவிக்குத் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று கூறுவது எப்படித் தவறாகும். எந்தப் பதவியையும் பெறாத தொண்டன் பதவிக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமைகூட இல்லாமல் – வேலைக்காரனாய், எடுபிடியாய், வால் பிடிப்பவனாய், அடிமையாய், ஏவலாளனாய், இருக்கத்தான் வேண்டுமா?
ஒரு கட்சியைக் கட்டிக்காக்கின்ற தொண்டனுக்கு தனக்கு ஆணையிடும் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வேண்டுமா? வேண்டாமா? தொண்டரென்றால் யார்? ஒரு அரசியல் கட்சியின், அஸ்திவாரமும். தொண்டனுக்குக் கட்சிதான் உடல். அவன் அசைந்தால்தான் கட்சி இயங்கும். அவன் அடங்கிவிட்டால் கட்சி முடங்கிவிடும் என்று கூறியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர், “ குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் எல்லாவித பலன்களை அடைவதையும், அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக செயல்படுவதையும், இயக்கத்தின் ஆணிவேராக இருக்கின்ற அடிமட்டத் தொண்டர்கள் இனியும் வேடிக்கைபார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். இது போன்று, ஒரு சிலரால் கட்சிக்கு ஏற்படும் ஆபத்தை மனதில் வைத்துத்தான், அன்றைக்கே நம் புரட்சித்தலைவர் அவர்கள், “தோட்டம் காக்கப் போட்ட வேலிப் பயிரைத் தின்பதோ அதைக் கேள்வி கேட்க ஆள் இல்லாமல் பார்த்து நிற்பதோ” என்று தன் பாடல் வாயிலாக நமக்கெல்லாம் எச்சரித்துச் சென்றுள்ளார்.
எந்த ஒரு செயலானாலும் எல்லோரும் ஒன்றிணைந்து, மகிழ்ச்சியோடு அனைவராலும் ஆசிர்வதிக்கப்பட்டு நடைபெறும் போதுதான், அந்த செயல் சிறப்பானதாக இருக்கும். உதாரணமாக, ஒரு திருமணம் என்றால் கூட அது எவ்வாறு நடக்கவேண்டும் என்றால், உற்றார், உறவினர், ஊர்மக்கள் என அனைவருக்கும், முன்னதாகவே அழைப்பிதழ் அனுப்பி, எல்லோரையும் கலந்துகொள்ளச் செய்து, அனைவரது வாழ்த்துக்களோடும், ஆசீர்வாதத்தோடும் ஒரு திருமணம் நடைபெற்றால் தான் அது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்த மணமக்களும் தங்கள் வாழ்க்கையில் மேன்மையடைவார்கள். அது போன்று இல்லாமல், யாருக்கும் தெரியாமல், உற்றார், உறவினர், ஊர்மக்கள் என அனைவரையும் உதறி தள்ளிவிட்டு அனைவரது எதிர்ப்புகளையும் மீறி திடீரென்று ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு, மணமகன், மணமகள் வீட்டிற்குச் செல்வதும், மணமகள், மணமகன் வீட்டிற்குச் செல்வதும் நகைப்புக்குரிய செயலாகத்தான் அமையுமே தவிர யாருமே ரசிக்கமாட்டார்கள்.
இது போன்று ஒருவரையும் மதிக்காமல் யாருடைய ஆசீர்வாதமும் இல்லாமல் திருமணம் நிகழ்ந்தால், அதை யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள், இதனால் அவர்களுக்கு எந்தவிதத்திலும் மகிழ்ச்சியும் ஏற்படாமல், நிலையான வாழ்க்கையும் அமையாமல், இறுதியில் அனைவராலும் ஒதுக்கி வைக்கப்படும் நிலை தான் ஏற்படும். மேலும், இது போன்ற துர்ப்பாக்கிய நிலையைக் கண்டு அனைவரும் பரிதாபப்படுவார்களே தவிர யாரும் பொறாமை கொள்ளமாட்டார்கள்.
நம் புரட்சித்தலைவரின் எண்ணத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும், நம் அடிப்படைத் தொண்டர்கள் பலனடையும் வகையிலும், நம் புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்ட விதிகள் அழிந்து விடாமல், இதற்கு வலுசேர்க்கும் வேலைகளை முதலில் செய்வதுதான் இன்றைக்கு நமது முதல் கடமையாகக் கொண்டு, ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம். இந்த பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் வரை கண் அயராது, ஓய்வின்றி உழைப்போம், உழைப்போம் என்று அனைத்து அடிமட்ட தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**
�,”