vசசிகலா வருகை : கெடுபிடிகளை தளர்த்திய போலீஸ்!

Published On:

| By Balaji

பெங்களூருவிலிருந்து சசிகலா சென்னை வந்துகொண்டிருக்கும் நிலையில் போலீசார் கெடுபிடிகளைத் தளர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகி ஒரு வாரம் காலம் தனியார் பண்ணை வீட்டில் தங்கியிருந்த, மறைந்த முதல்வரின் நெருங்கிய தோழியான சசிகலா, சென்னை போகும்போது எதிர்கொள்ள போகும் பிரச்சனைகளைச் சரிசெய்வது சம்பந்தமாக ஆலோசனை மேற்கொண்டார்.

இன்று (ஜனவரி 8), காலையில் புறப்பட்டு தமிழக எல்லையான அத்திபட்டியில் நுழையும்போது எதிர்பார்க்காத அளவிற்கு தமிழக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அதிமுக கொடிகளை சசிகலா காரில் பொருத்தக்கூடாது என்று போலீஸார் நோட்டீஸ் வழங்கினர். மைக்கில் பேசிய

கிருஷ்ணகிரி எஸ்.பி. அம்மா கொடியைக் கழட்ட சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

மாற்று வழியை தயாராக வைத்திருந்த சசிகலா, தமிழக பதிவு (3333) எண் கொண்ட இன்னோவா காரில் மாறி அமர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளார். அத்திபட்டி டூ கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வரையில் 7 வரவேற்பு பாயிண்ட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த சூழலில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி நெருங்கவே மாலை 3.50 ஆகிவிட்டது.

பிற்பகல் சூளகிரி அருகே சின்னாறு பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது, டெம்போ டிராவல் கேரவான் வேனில் மாறி ரெப்ரெஷ் ஆகிவிட்டு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் சசிகலா.

“மக்கள் காலையிலிருந்து காத்துகிட்டு இருக்காங்க…. காரை மெதுவாக இயக்குங்கள்” என்று, மக்களைப் பார்த்து கை அசைத்தும், கையெடுத்துக் கும்பிட்டபடி வருகிறார் சசிகலா. வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

சசிகலாவுடன் வருபவர்களிடம் வரவேற்புகள் பற்றி கேட்டோம், “காவல் துறையினர் காலையில் கெடுபிடிகள் போட்டனர். மதியத்துக்குப் பிறகு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் கூட்டத்தை சில இடங்களில் ஒழுங்கு படுத்துகிறார்கள். நேற்று இரவு 12.30 மணியளவில் சில விஷமிகள் விளம்பர பேனர்களை கிழித்து விட்டார்கள். இரவோடு இரவாக போலீஸாரிடம் புகார் கொடுத்துவிட்டு காலையில் புதிய விளம்பர பேனர்களை வைத்துவிட்டோம். சசிகலா சென்னை போவதற்கு நாளை காலை நான்கு மணி ஆகிவிடும்” என்கிறார்கள்.

**-வணங்காமுடி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share