xசசிகலா செப்டம்பரில் விடுதலை: ஆர்டிஐ பின்னணி!

Published On:

| By Balaji

சசிகலா விடுதலை குறித்த ஆர்டிஐ தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகிய மூவரும், 2017 பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். மூவரும் சிறை சென்று இன்னும் இரண்டு தினங்களில் 40 மாதங்கள் நிறைவடையப்போகிறது. இவர்கள் ஏற்கனவே சிறையிலிருந்த காலங்களைக் கழித்தும், நன்னடத்தை காரணமாகவும் விரைவில் வெளியில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அரசியல் நெருக்கடியால் சசிகலா வெளியில் வருவது தள்ளிப்போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சட்ட ரீதியாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் சசிகலா வெளியில் வரவேண்டும். ஆகவே, அதற்குள் அரசியல் நெருக்கடியால் சூழ்ச்சிகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவரது வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்தனர். அதன் முடிவில், பெங்களூருவைச் சேர்ந்த டி. நரசிம்மமூர்த்தி மூலமாக ஆர்டிஐயில் சசிகலா எப்போது வெளியில் வருவார், வெளியில் வருவதில் ஏதேனும் சிறை விதிமீறல்கள் உள்ளதா, என ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. மே 14ஆம் தேதி ஆர்டிஐ மூலம் அவர் அளித்த மனு, மே 21ஆம் தேதி சிறை நிர்வாகத்திற்குக் கிடைத்துள்ளது.

ஆர்.டி.ஐ,யில் கேட்ட கேள்விகளுக்குச் சிறை கண்காணிப்பாளர் ஜூன் 6ஆம் தேதி கொடுத்த பதிலில், “குற்றவாளிகளின் விடுதலை தேதியை கணக்கிடுவதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளடங்கி உள்ளன, உதாரணமாக அபராத தொகையின் நிலையின் அடிப்படையில் கைதியை விடுதலை செய்யும் முறையில் மாறுபடும், அதனால் சசிகலாவின் விடுதலைகுறித்து சரியான தேதியைக் கொடுக்கமுடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் சசிகலா தரப்பிற்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது.

காரணம் ஆர்டிஐயில், சசிகலா சிறை விதி மீறல்கள் செய்துள்ளாரா, எப்போது வெளியில் வருவார் என 5 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே கேள்விக்கு மட்டும் பதில் சொல்லியிருக்கிறார்கள், மற்ற கேள்விகளுக்குப் பதில் கொடுக்கவில்லை. அப்படியென்றால் சசிகலா சிறை விதிமீறல்கள் ஏதும் செய்யவில்லை என்றுதானே அர்த்தம் என்று கூறுகிறார்கள் சசிகலா தரப்பினர்.

மேலும், சசிகலா வழக்கறிஞர் டீம் கொரோனா காலத்திலும், சசிகலாவை வெளியில் கொண்டுவருவதற்கு அனைத்து விதத்திலும் முயற்சித்து வருகிறது. விசாரணை கைதியாகச் சிறையிலிருந்த காலம், தண்டனை பெற்று ஜெயலலிதாவுடன் இருந்த காலம், விடுமுறை நாட்கள், நன்னடத்தை காரணமாகவும் சட்ட ரீதியாகச் செப்டம்பர் மாதம் வெளியில் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறுகிறார்கள். இதனால் அபராத தொகையைச் செலுத்துவதற்கு சசிகலாவின் நம்பிக்கையானவர்கள் தயாராகி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

**வணங்காமுடி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share