கொரோனா வைரஸ் வேகமெடுக்கும் நேரத்தில் கட்சி ரீதியான நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியான அதிமுக அமைதியாகவே இருக்கிறது. எதிர்க்கட்சியான திமுக வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகப் பொதுக்கூட்டம் மற்றும் கட்சிக் கூட்டங்களை நடத்திவருகிறது. இந்த நிலையில் அமமுகவும் சைலன்ட் மோடில்தான் இருக்கிறது என்று பலரும் நினைத்திருக்க, கட்சிப் பணியில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்கள் அமமுகவினர். பகுதி, ஒன்றியம், மாவட்ட அமைப்புகளிலும் மற்றும் அணியின் பொறுப்பாளர்களையும் வேகமாக நிரப்பி வருகிறார்கள்.
குறிப்பாக படித்த வேலையில்லா பட்டதாரிகளைக் குறிவைத்து அமமுக மடக்கி வருவதாகவும் சொல்கிறார்கள். உதாரணமாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் பழனியப்பன் மகன் எழில்மறவன், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில், டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கு இலவசமாக கோச்சிங் சென்டர் நடத்திவருகிறார்.
பயிற்சிக்கு வருபவர்களுக்கு தேவையான உணவு, நோட்டு, புத்தகங்கள், பேனாக்களையும் வாங்கி கொடுத்து வருகிறார். முந்நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அனுபவமுள்ள ஆசிரியர்களை வைத்து பயிற்சி கொடுத்து வருகிறார். பயிற்சி பெறும் மாணவர்களிடம், “நீங்கள் அனைவரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று அரசு வேலைக்குப் போக வேண்டும். அதற்கான உதவிகளையும் நான் உங்களுக்குத் தொடர்ந்து செய்வேன், நீங்கள் எந்தத் துறையிலிருந்தாலும் அமமுகவையும் சின்னம்மாவையும் மறக்கக் கூடாது. இனி யாரும் சின்னம்மா என்று அழைக்க வேண்டாம் விளம்பரம் செய்ய வேண்டாம். மாறாக இனிவரும் காலங்களில் தியாகச் செம்மல் அம்மா என்றுதான் அழைக்க வேண்டும்” என்று அவர்களிடம் கூறி வருகிறார் பழனியப்பன் மகன்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து காஞ்சிபுரம், சென்னை வரையில் புதிய நிர்வாகிகளை நியமிப்பதும், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதுமான வேலைகளில் தீவிரம் காட்டிவருகிறார் பழனியப்பன். இவரைப்போல அமமுகவினர் பலரும் பல இடங்களில் சத்தமில்லாமல் வேலையில்லாத பட்டதாரிகளை அழைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதப் பயிற்சி கொடுத்து, கட்சிக்கும் தீவிரமான உறுப்பினராகச் சேர்த்துவருகிறார்கள்.
இவை அனைத்தும் டிடிவி தினகரனின் மாஸ்டர் பிளான் என்கிறார்கள் மாநிலப் பொறுப்பாளர்கள்.
**-எம்.பி.காசி**
�,