சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அதிமுகவுடன் சசிகலா இணைவாரா என்ற கேள்விக்கு தினகரன் பதிலளித்துள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (பிப்ரவரி 27) நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தற்போதைய அரசியல் சூழல்கள், குடும்ப நிலவரங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “டெல்லியில் கவலைக்குரிய சம்பவங்கள் நடந்துவருகின்றன. இதுவரை 35 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சிஏஏ விவகாரத்தை மத்திய அரசு தாயுள்ளத்தோடு அணுகி, இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிஏஏவை அரசியலாக்க விரும்பவில்லை. சிஏஏ மூலம் அனைத்து மதத்தினருக்கும் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பில் பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.
ஆறுமுகசாமி ஆணையத்தின் முடிவு வந்தால் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் சிறைக்குச் செல்வார்கள் என்று ஸ்டாலின் பேசியுள்ளாரே என்று செய்தியாளர் கேட்க, “ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறதாம். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் சொல்லி தமிழகம் முழுவதும் திமுகவினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அதில் சசிகலாவை மையப்படுத்தினர். பின்னர், அதை பன்னீர் கையில் எடுத்துக்கொண்டார். தேர்தல் வரவுள்ளது என்பதால் இவ்வாறு ஸ்டாலின் பேசுகிறார். நாட்டில் நடக்கும் குழப்பங்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வர அவர்கள் முயற்சி செய்கிறார்கள். திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுக்கும் அனைத்து முயற்சிகளையும் அமமுக மேற்கொள்ளும்” என்று குறிப்பிட்டார்.
சசிகலா வெளியே வந்தால் அதிமுக -அமமுகவை ஒன்றாக இணைப்பார் என்று கே.சி.பழனிசாமி கூறுகிறாரே என்ற கேள்விக்கு, “அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் சசிகலா கேட்டுக்கொண்டார். எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபிறகு ஒருமுறை கூட சிறையில் வந்து சசிகலாவைப் பார்க்கவில்லை. நடராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, சசிகலாவுக்கு பரோல் அளிப்பதற்குக்கூட பல்வேறு கெடுபிடிகளைக் காட்டினர். நடராஜன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தக்கூட யாரும் வரவில்லை” என்று சுட்டிக்காட்டிய தினகரன்,
”இப்போது சசிகலா சிறையிலிருந்து வெளியே வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்களுடன் சென்று சசிகலா இணைவார் என்று சொல்வது அவர்களை அசிங்கப்படுத்துவது போல உள்ளது. அமமுக தொண்டர்களைக் குழப்பவே இவ்வாறு செய்கின்றனர்” என்று விமர்சித்தார்.
**-த.எழிலரசன்**�,