கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சசிகலாவிடம் சென்னை தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள் போலீசார்.
2017 ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளைகள் அரங்கேறியது.
அப்போது முக்கிய டாக்குமென்ட்கள், டைமண்ட் பொருத்திய வாட்ச்சுகள் மற்றும் சில பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.
ஆட்சி மாறியதும் கொடநாடு வழக்கை விசாரிக்க மேற்கு மண்டல ஐஜியாக சுதாகரனை நியமித்து அவரது தலைமையில் சிறப்பு டீம் அமைக்கப்பட்டது.
200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை செய்தவர்கள், நேற்று வியாழன் 21ஆம் தேதி தி. நகர் அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலா வீட்டுக்கு சென்றனர்.
ஐஜி சுதாகர் தலைமையில் டிஐஜி முத்துசாமி, எஸ் பி ஆசிஷ் ராவத் மற்றும் விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி உட்பட ஒரு டீம் சசிகலா வீட்டிற்கு சென்றது.
சசிகலா உதவியாளர் வந்தவர்களை வரவேற்று ஒரு அறையில் அமரவைத்தார். சிறிது நேரத்திற்கு பிறகு சசிகலா வந்தார்.
அவரிடம் விசாரணை அதிகாரிகள் யார் யார் எந்த பொறுப்பு என்று அறிமுகம் செய்துகொண்டார்கள்.
ஒருவர் லேப்டாப் ஓப்பன் செய்து வாக்குமூலத்தை டைப்பிங் செய்வதற்கு தயாரானார். இன்னொருவர் வீடியோ பதிவு செய்வதற்கு கேமரா ஆன் செய்தார்.
விசாரணை அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தனர்.
துவக்கத்தில் அவரது குடும்பத்தைப் பற்றி கேட்டனர் போலீசார். அதற்கு விரிவாக பதில் அளித்தார் சசிகலா. குறிப்பாக சசிகலா குடும்பத்தில் விவேக் பங்கு பற்றி போலீசார் சில கேள்விகளை கேட்டார்கள். இதற்கும் பதில் சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்பட்டது பற்றியும் கேட்டவர்கள், கொடநாடு எஸ்டேட் விபரம் அங்கே வேலை செய்பவர்கள் எவ்வளவு பேர், யார் யாருக்கு என்ன பொறுப்புகள் என்று கேட்டார்கள்.
‘இதெல்லாம் மேனேஜருக்குதான் (நடராஜன்) தெரியும்’ என்று பதில் சொல்லியுள்ளார் சசிகலா.
கேள்விகளுக்கு இடையே போலீசாரிடம் சில விஷயங்களை உருக்கமாக பேசியுள்ளார் சசிகலா.
‘கொடநாடு எஸ்டேட்ட அக்கா வாழ்ந்த கோயில். அதற்குள் நுழைந்து துவம்சம் செய்துவிட்டு போயுள்ளார்கள். அவர்களை கண்டுபிடியுங்கள்’ என்று கண்கலங்கியுள்ளார் சசிகலா.
கொலை செய்யப்பட்ட ஓம் பகதூர் வெளி மாநிலமாக இருந்தாலும் விசுவாசமானவர் என்று வருத்தப் பட்டுள்ளார்.
ஒவ்வொரு சம்பவத்தையும் கதை போல சசிகலா விளக்கிச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்டனர்.
பிறகு மீண்டும் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
கொடநாடு எஸ்டேட்டில் என்னன்ன இருந்தது? திருடு போனவை என்னென்ன? சென்னை தனியார் அப்பார்ட்மென்டில் ஐடி அதிகாரிகள் கைப்பற்றிய டாக்குமென்ட்கள் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போனவையா என்று கேள்விகளைத் தொடுத்தனர் போலீசார்.
மதியத்துக்கு மேல் களைப்பாக இருப்பதாக சொன்ன சசிகலா, ‘நீங்கள் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் கேள்வி கேளுங்கள். சில கேள்விகளுக்கு வழக்கறிஞர்களின் ஆலோசனை பெற்று பதில் சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார் சசிகலா.
நேற்றைய விசாரணை முடிந்ததும் வீட்டுக்கு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “நீங்களெல்லாம் காலையிலிருந்து காத்திருக்கிறீர்கள். இப்போதைக்கு எதுவும் நான் பேச முடியாது. நாளையும் விசாரணை தொடரும் என்று தெரிகிறது. விசாரணை முடிந்த பிறகு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்” என்று கூறியிருந்தார் சசிகலா.
அதன்பிறகு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இன்று காலை மீண்டும் சசிகலாவிடம் விசாரணை தொடங்கியிருக்கிறது.
**வணங்காமுடி**