மருத்துவமனையில் சசிகலா: பெங்களூருவில் தினகரன்

Published On:

| By Balaji

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க அமமுக பொதுச் செயலாளர் தினகரன் பெங்களூரு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளரான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதியாக இருந்து வந்தார். வரும் 27 ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 20) மாலை சசிகலாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி அவரை சிறைக்கு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சசிகலாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து நேற்றே பெங்களூருவுக்குப் புறப்பட்டுவிட்டனர்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று( ஜனவரி 21) காலை சசிகலாவை சந்திப்பதற்காக பெங்களூரு சென்றுள்ளார்.

பெங்களூருவில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,

“ சிறைத் துறையில் இருந்து எங்கள் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு, நேற்று மாலை சசிகலாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த ஒருவாரமாக காய்ச்சல் இருந்தது. அதை கவனித்துக் கொண்டிருந்தோம். இன்று கொஞ்சம் சோர்வாக இருந்தார். இன்று மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எஸ்கார்டுக்காக காத்திருக்கிறோம்’என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதையடுத்து உறவினர்களும் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களை சந்திக்கவிடவில்லை என்று ஆதங்கத்தில் இருக்கிறார்கள்.நானும் அவரை சந்திக்கவே இங்கே வந்திருக்கிறேன்.

அவரை சந்திப்பதற்காக சிறைத் துறையின் அனுமதியோடு, இங்கே இருக்கும் காவல்துறையின் அனுமதியும் தேவை என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்காக எங்கள் வழக்கறிஞர்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது எனக்கு கிடைத்த தகவல்படி அவர் நன்றாக இருக்கிறார். ஆக்ஸிஜன் கொடுக்கப்படுகிறது. பிசிஆர் டெஸ்டில் அவருக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளது. நான் நேராக சந்தித்தபிறகுதான் அவரது உடல் நலம் பற்றி சரியாக சொல்ல முடியும்.

தமிழ்நாட்டில் ரேபிட் டெஸ்ட்டுடன் சி.டி.ஸ்கேன் எடுப்பார்கள். இங்கே சி.டி. ஸ்கேன் எடுக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போனால் கேர் இன்னும் நன்றாக இருக்கும் என்று உறவினர்கள் கருதுகிறார்கள். எனவே அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதா என்பதை மருத்துவர்களிடம் பேசிதான் முடிவு செய்யமுடியும்” என்று கூறினார்.

சசிகலாவுக்கு பிசிஆர் டெஸ்டில் கொரோனா இல்லை என்ற முடிவு வந்திருக்கிறது. அவர் இன்னும் நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share