அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவதாகவும் தனது அக்காவின் கனவான மீண்டும் அவரது ஆட்சியை அனைவரும் ஒற்றுமையோடு இருந்து அமைக்க வேண்டுமென்றும் நேற்று (மார்ச் 3) பரபரப்பான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் சசிகலா.
இதை அதிமுகவினர் மிகப்பெரிய மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கையில், அமமுகவினர் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
பெங்களூருவில் இருந்து சென்னை வரும்போது, “நான் தீவிர அரசியலில் நிச்சயமாக ஈடுபடுவேன்” என்று சொன்ன சசிகலா, ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்துக்குள் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டியதற்கு என்ன காரணம், ஏதும் நிர்ப்பந்தமா, ஏதும் மிரட்டலா என்று அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.
“வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற வேண்டுமானால் தோல்வி அடையாமல் இருக்க வேண்டுமானால் சசிகலா அமைதியாக இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஏற்கனவே முதல்வராக பதவியேற்க இருந்த சமயத்தில் சிறைக்கு போக நேரிட்டது போல இப்போதும் போக நேரிடும் என்று சசிகலாவுக்கு மிரட்டல்கள் பாஜக தரப்பிடம் இருந்து வந்திருக்கின்றன.
சசிகலாவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளின் அடிப்படையில் அவர் 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்துகளை பினாமிகள் மூலம் வைத்திருப்பதாக மத்திய அரசு கண்டறிந்திருக்கிறது. இதை வைத்து மீண்டும் அரசியலுக்கு வந்தால் பினாமி தடுப்புச் சட்டம் மூலம் மீண்டும் சிறைக்கு செல்ல நேரிடும் என்று பாஜக தரப்பு சசிகலாவை மிரட்டியிருக்கிறது.
இதுபற்றி தினகரனிடம் சசிகலா பேசியபோது, ‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. சும்மா மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நாம் பயந்துவிடக் கூடாது’என்று சொல்லியதாகவும் ஆனாலும் சசிகலா அந்த காரணத்தால்தான் அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவை எடுத்துள்ளார்” என்றும் தகவல்கள் வருகின்றன.
சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் இதுகுறித்து நாம் பேசியபோது,
“அப்படியெல்லாம் சசிகலாவை யாரும் மிரட்டவில்லை, மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. இயல்பாகவே கடந்த நாற்பது ஆண்டுகளாக ஜெயலலிதாவே தன் உலகம் என்று வாழ்ந்தவர். அந்த வகையில் ஜெயலலிதா வாழ்நாளெல்லாம் கண்ட இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து அரசியல் செய்வதை அவர் துளியும் விரும்பவில்லை. அதற்கு அவரது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.
பிப்ரவரி 6 ஆம் தேதி மின்னம்பலத்திலேயே நீங்கள் தெளிவாக எழுதியிருந்தீர்கள். ‘பெங்களூருவில் சசிகலா கோடாகுருக்கி பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வரும் சசிகலாவோடு, டாக்டர் வெங்கடேஷ், அவரது மனைவி ஹேமா, விவேக், அவரது மனைவி கீர்த்தனா, சசிகலா உதவியாளர் கார்த்திகேயன், ஒரு டாக்டர், இரண்டு செவிலியர்கள், ஒரு செவிலியர் உதவியாளர், வழக்கமான சமையல்காரர் உட்பட 12 பேர் தங்கி இருக்கிறார்கள். சிறையிலிருந்து வெளியில் வந்தபின், குடும்பத்தாருடன் அதிகம் பேசாத சசிகலா, பேசும்போதெல்லாம் சொல்லும் ஒரே அட்வைஸ் இதுதான்…‘‘நம்ம குடும்பத்திலிருந்து இப்போதைக்கு வேறு யாரும் அரசியலுக்கு வரவேண்டாம்; தலையிடவேண்டாம். அவரவர் பிசினஸ்களை மட்டும் பாருங்கள்!
பிரச்சினை ஏதும் செய்து கொள்ள வேண்டாம். சுமூகமாகப் போய் விடுவோம் ஒரு தகவலுக்கு வெயிட் பண்ணுகிறேன். வந்ததும் அக்கா சமாதிக்குப் போய்விட்டு வீட்டுக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்”என்று சசிகலா சொன்னதை மின்னம்பலத்தில் அப்போதே வெளியிட்டிருந்தீர்கள். அவர் மனதில் இருப்பது இதுதான்.
மற்றபடி அவரை யாரும் கட்டாயப்படுத்தியோ மிரட்டியோ பணிய வைக்க முடியாது. அவர் எத்தனையோ வழக்குகளைப் பார்த்துவிட்டார். சிறைக்கே சென்று வந்துவிட்டார். இப்போது பினாமி தடுப்பு சட்டம் போட்டால் கூட ஜாமீனில் வெளிவர வாய்ப்புகள் உள்ளன. வழக்கின் தீர்ப்பும் இப்போதைக்கு வர வாய்ப்பில்லை. எனவே அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவர் தான் நாற்பதாண்டுகள் கூடவே வாழ்ந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும் கூட அவர் கண்ட கட்சிக்கும் இரட்டை இலைக்கும் எதிராக தன் அரசியல் இருந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார். அதனால்தான் இந்த முடிவு. வேறு எந்த பயமும் இல்லை பணியவும் இல்லை” என்கிறார்கள்.
**-வேந்தன்**
[தேர்தலுக்கு முன்…அமமுக கலைப்பு: அதிமுகவுடன் இணைப்பு! ஒதுங்கிக்கொண்டு ஒன்றாக்க முயற்சிக்கிறாரா சசிகலா?](https://minnambalam.com/politics/2021/02/06/23/sasikala-silently-works-to-merge-ADMK-and-AMMK)�,