அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
2016ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக ஜெயலலிதா உயிரிழந்த பிறகு, கூடிய அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில்… அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தசமயம் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இதையடுத்து, அதிமுகவின் மொத்த அதிகாரத்தையும் கையில் எடுத்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் ஆகியோரை பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுத்த முடிவு செல்லாது என தீர்மானம் நிறைவேற்றினர். இதைத் தொடர்ந்து, டிடிவி தினகரன் அதிமுக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
எடப்பாடி, பன்னீரின் பொதுக்குழுத் தீர்மானங்களுக்கு தடை விதிக்கக் கோரி சசிகலாவும், தினகரனும் தொடர்ந்த வழக்கில், ”பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது, குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும்” என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், டிடிவி தினகரன் அதிமுக-விலிருந்து பிரிந்து சென்ற பிறகு, அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து தான் விலகி கொள்வதாக டிடிவி தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு சசிகலா பதிலளிக்கவும் கடந்த முறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று(ஏப்ரல் 23) விசாரணைக்கு வந்தது. நீதிபதி விடுப்பில் இருக்கும் காரணத்தால் வழக்கு விசாரணை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
**வினிதா**�,