அலைபேசி மூலம் அதிமுக தொண்டர்களுடன் பேசி அந்த உரையாடலை பதிவு செய்து, அவ்வப்போது அதை வெளியிட்டு அதிமுகவுக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறார் சசிகலா. முதல் ஆடியோ வெளிவந்தவுடனேயே அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி இதுபோன்ற ஆடியோக்களால் அதிமுக தொண்டர் ஒருவர் கூட செவி சாய்க்க மாட்டார் என்று சசிகலாவுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனால் சசிகலாவின் அலைபேசி உரையாடல்களும் ஆடியோ வெளியிடல்களும் தொடர்ந்தன.
அதன் பின் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூன் 4 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி சில மாவட்டச் செயலாளர்களை மட்டும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் ஓ.பன்னீர் செல்வம் கூட கலந்துகொள்ளவில்லை. அந்தக் கூட்டம் முடிந்ததும் எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலாவின் ஆடியோ பற்றி கேட்கப்பட்டபோது,
, “அந்த அம்மையார் அதிமுக கட்சியில் இல்லை. நடைபெற்ற சட்டன்றத் தேர்தலின்போதே அந்த அம்மையார் நான் அரசியலில் இருந்து விலகிவிட்டேன் என்று அறிக்கை வெளியிட்டார். இப்போது அவர் பேசியதாக சொல்வதெல்லாம் அதிமுக தொண்டர்களோடு அல்ல. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்களோடு பேசியுள்ளார். அதிமுகவினரிடம் பேசினார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது, சொல்லுங்கள்? அதிமுக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்கிறது. இதை குழப்ப சிலர் முயற்சிக்கிறார்கள்” என்று கே.பி. முனுசாமி அளித்த பதிலையே அளித்தார் எடப்பாடி.
இதன் அடுத்த கட்டமாக ஜூன் 14 ஆம் தேதியன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், “சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி, அதிமுகவின் வளர்ச்சிக்கும், புகழுக்கும்; இழுக்கும், பழியும் தேடியவர்கள் அனைவரையும் அதிமுகவிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும்; இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியின் மூத்த முன்னோடிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அன்றே 14 பேரை கட்சியில் இருந்து நீக்கியும் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அதன் பிறகும் அதிமுக பிரமுகர்களுடனும் தொண்டர்களுடனும் சசிகலா அலைபேசியில் உரையாடி அதன் பதிவுகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில்தான், ஜூன் 17 ஆம் தேதி மதியம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடமிருந்து சேலம் மாவட்டத்தில் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பகல் நேரத்தில் அவசரமாக ஒரு தகவல் அனுப்பப்பட்டது.
”எல்லாரும் மதியம் 2.30 மணிக்கு ஓமலூர்ல இருக்குற கட்சி ஆபீசுக்கு வந்துடுங்க. கொஞ்ச நேரம்தான். முக்கியமான ஒரு விஷயம்’என்று சொல்லி அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பப்பட்டது,
சரியாக 2.30 மணிக்கு ஒமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார். அவரோடு அமைப்பு செயலாளர் செம்மலை, ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தனர். எம்.எல்.ஏ.க்கள் போன உடனேயே அவர்களது கைகளில் 6 தீர்மான நகல்கள் கொடுக்கப்பட்டன. எல்லாரும் கையெழுத்து போட்டனர். ஏழே நிமிடங்களில் கையெழுத்து போட்டுவிட்டு கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டார் எடப்பாடி. அதிமுகவின் ஆதரவு சேனல் தவிர வேறு எந்த ஊடகத்தையும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. தீர்மான நகல்கள் மட்டும் அதன் பின் அனுப்பப்பட்டன.
அந்த 6 தீர்மானங்களில் ஒன்றுதான், “அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சசிகலா தொலைபேசியில் பேசும்போது, சாதிய உணர்வுகளைத் தூண்டும் விதமாகப் பேசுவது, ஒருதாய் வயிற்றுப் பிள்ளையாக வாழும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதை அதிமுக சேலம் புறநகர் மாவட்டம் சார்பாகக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். ஜெயலலிதா மற்றும் அதிமுக செயல் வீரர்களின் உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும், தங்களை வளப்படுத்திக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர், மீண்டும் அதிமுகவை அபகரித்துவிட வஞ்சக வலையை விரித்துக் கொண்டுள்ளனர். ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக, அதிமுக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை, அதிமுகவிலிருந்து உடனடியாக நீக்கியதையும், அதிமுக தலைமை அலுவலகக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வரவேற்கிறோம்”என்பதுதான் அந்தத் தீர்மானம்.
இவ்வளவு அவசரமாக ஏழே நிமிடங்களில் எடப்பாடி தலைமையில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கையோடு அடுத்தடுத்து மற்ற மாவட்டச் செயலாளர்களையும் எடப்பாடியே தொடர்புகொண்டு இதே மாதிரி தீர்மானம் போடச் சொல்லியிருக்கிறார். அவர்களில் ஏற்கனவே சசிகலாவுக்கு எதிராக பேட்டி கொடுத்த சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார் போன்ற முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பேச்சின்படி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இன்னும் பல மாவட்டங்கள் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றவில்லை.
எடப்பாடியின் இந்த திடீர் மூவுக்கு காரணம் என்ன என்று சேலம் மாவட்ட அதிமுகவில் விசாரித்தபோது எடப்பாடிதான் காரணம் என்கிறார்கள்.
“தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்களிடம் உரையாடி அதை
ஆடியோவாக வெளியிட்டு வந்த சசிகலா, எடப்பாடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்களிடமே பேசிய உரையாடல்கள் கடந்த சில நாட்களில் வெளியாகின. எடப்பாடியைச் சேர்ந்த அதிமுகவின் மீனவ சமூக பிரமுகரான சுரேஷ், புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா, எடப்பாடி ராமகிருஷ்ணன் ஆகியோருடன் சசிகலா நடத்திய உரையாடல்கள் வெளியாகின. இது எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமிக்கு முன்னதாக சேலம் அதிமுகவில் குறிப்பாக எடப்பாடி தொகுதியில் வளர்ந்துகொண்டிருந்த பிரமுகர் சுரேஷ். எடப்பாடி தலையெடுத்த பிறகு கட்சியில் ஓரங்கட்டப்பட்டார், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட திமுக மாவட்டச் செயலாளர் செல்வகணபதியை கடுமையாக எச்சரித்து மேடைகளில் பேசினார் சுரேஷ். ‘என்னை எடப்பாடியே இப்படி பேசுறது இல்லை. சுரேஷ் இப்படி பேசுறாரு? எடப்பாடியே அவரை ஏமாத்திக்கிட்டுதானே இருக்காரு. ஏன் சுரேஷ் இப்படி பேசுறாரு’என்று செல்வகணபதியே தனது அதிமுக நண்பர்களிடம் விசாரித்ததாக பேசப்பட்டது. அப்படிப்பட்ட சுரேஷிடம்தான் பேசியிருக்கிறார் சசிகலா.
‘அம்மா நீங்க சாதாரண நபரா இருந்த பழனிசாமிய அன்னிக்கு கூவத்தூர்ல பெரிய இடத்துல உக்காரவச்சீங்க. ஆனா அவர் துரோகம் பண்ணிட்டாரு. தொண்டர்கள் எல்லாரும் உங்க கூடதான் இருக்காங்க. ஒரு அஞ்சாறு பேர்தான் உங்களுக்கு எதிராக தொடர்ந்து இப்படி பண்ணிக்கிட்டிருக்காங்க. எடப்பாடி தொகுதியிலயே அதிமுக தொண்டர்கள் நீங்க எப்ப வருவீங்கனுதாம்மா எதிர்பாக்குறாங்க’ என்று சொல்ல…அதற்கு பதிலளித்த சசிகலா, ‘ஆமா சுரேஷ்….’எடப்பாடியிலேர்ந்து எனக்கு நிறைய கட்சிக்காரங்க கடிதம் போட்டிருக்காங்க. நானும் பதில்லாம் போட்டுக்கிட்டேதான் இருப்பேன். திருமண நிகழ்ச்சிக்கு எனக்கு பத்திரிகை அனுப்பியிருக்காங்க. நானும் அதற்கு வாழ்த்து அனுப்பியிருக்கேன்’என்று சொல்கிறார்.
தொடர்ந்து பேசும் சுரேஷ், ‘அம்மா 2011க்கு முன்னாடி எடப்பாடி பழனிசாமி கட்சியில எந்த பொறுப்புலயும் கெடையாதும்மா… அப்ப எம்.ஆர்.ஐயாகிட்டையும் ராமச்சந்திரன்கிட்டையும் நான் தான் அழைச்சு வருவேம்மா. அவர் பேரையே நோட்டீஸ்ல போட மாட்டாங்கம்மா. அவர் பதவிக்கு வந்தவுடனே என்னை பத்தாண்டு காலம் நடுத்தெருவுல நிப்பாட்டினாரும்மா. அம்மா….லாக்டவுன் முடிஞ்சதும் முதல் கூட்டம் எடப்பாடியில நான் ஏற்பாடு செய்யுறேன்ம்மா…நீங்க வரணும்மா…’என்றதும், ‘சரிப்பா…சரிப்பா…’என்கிறார் சசிகலா.
’கட்சினு வர்றப்ப எல்லாரையும் அரவணைச்சுதாம்ப்பா போகணும். கட்சித் தலைமைனு வர்றப்ப அப்படிதாம்ப்பா இருக்கணும். அம்மாவை கடுமையா திட்டின இரண்டாம் கட்டத் தலைவர்களை கூட அம்மா அரவணைச்சு கொண்டுபோனாங்க. ஜெ. அணி, ஜா அணினு எந்த வித்தியாசமும் இல்லாம அப்ப கட்சியை கொண்டுபோனோம். எனக்கு அப்ப சின்ன வயசு. அப்பவே அந்த மனப்பக்குவம் வந்துட்டுப்பா. அதனால் என்னன்னா எல்லாரும் ஒண்ணா இருந்து வலிமையா கொண்டுபோகணும்னுதான் எனக்கு 89 லேர்ந்தே எனது என்ணம்.
தலைவர் காலத்துலயே மேற்கு மண்டலம் நமக்குதான் ஓட்டுப் போடுவாங்க. அம்மா காலத்துலையும் நமக்கு அவங்க ஓட்டுப்போட்டிருக்காங்க. இப்பதான் இந்த மாதிரி ஒரு சிலர் வந்து பேரைக் கெடுத்துட்டுப் போறாங்க. அதனால் இந்த மாதிரியான செய்திகள் வர்ற மாதிரி நடந்துக்குறாங்களேனு வருத்தமா இருக்கு. இப்ப நீங்க உங்க பகுதியில நல்லா செயல்படுறீங்கன்னா உங்களுக்குதான் பதவி கொடுக்கணும். தலைமை அப்படிதான் பார்க்கணும். ரொம்ப குறுகிய மனப்பான்மை இருந்தா யாரும் தலைவரா இருக்க முடியாது’என்று சொல்கிறார் சசிகலா.
அப்போது சுரேஷ், ‘அம்மா எடப்பாடியோட இருக்குறவங்க பலரே என்கிட்ட அம்மா எப்ப வருவாங்கனு கேட்குறாங்கம்மா’என்றதும், ‘சீக்கிரம் வந்துடுவேன்ப்பா.கட்சி நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க அப்படிதாம்ப்பா கேட்பாங்க. கட்சியில தலைவர் மறைவுக்கு பிறகு நடந்த சிக்கல்களை எல்லாம் நான் பாத்து வந்திருக்கேன். அப்பவே எனக்கு பக்குவம் வந்துடுச்சு’
‘அம்மா சேலம் மாவட்டத்துல கட்சிக்காக உழைச்சவங்களாம் ரோட்ல நிக்கிறாங்கம்மா’ என்று சுரேஷ் சொன்னதும், ‘அதெல்லாம் நான் விடமாட்டேன்’என்கிறார் சசிகலா.
மீண்டும் சுரேஷ், ‘அம்மா உங்க முதல் கூட்டம் எடப்பாடியில ஏற்பாடு பண்றேம்மா… நீங்க இங்க வரணும்மா…’என்றதும் சரி சரி சரி…என்று மூன்று முறை சொல்கிறார் சசிகலா.
இந்த ஆடியோவை எடப்பாடி பழனிசாமி கேட்டபிறகுதான் எடப்பாடி பழனிசாமி உடனடியாக செம்மலை உள்ளிடோருக்கு போன் செய்து மாவட்ட அதிமுக கூட்டம் போட்டு அதில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் போட வேண்டும் என்று விவாதிக்கிறார். அதன் பிறகே அந்த ஏழு நிமிடக் கூட்டம் நடைபெற்றது,
அதையும் ஏற்காடு எம்.எல்.ஏ.சித்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் உடைத்துவிட்டார்.
“மீட்டிங்லாம் ஒண்ணும் நடக்கலை. மீட்டிங் போட்டாதானே கலந்துக்க முடியும். தீர்மானம் போன்ல சொன்னாங்க. அதுல கையெழுத்து போட்டுக் கொடுத்தோம். மீட்டிங் போட்டா உங்களுக்கு தெரியாம எப்படி நடக்கும்?”என்று கேட்டிருக்கிறார் சித்ரா.
நம்மிடம் பேசிய சேலம் அதிமுக பிரமுகர், “மாவட்ட நிர்வாகக் கூட்டம் என்றால் மாவட்ட அவைத் தலைவர், மாவட்டச் செயலாளர், மாவட்ட இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர செயலாளர்கள், 19 அணிகளின் செயலாளர்கள் எல்லாரும் கலந்துகொண்டு தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் அது செல்லும். ஆனால் எடப்பாடி நடத்திய கூட்டத்தில் இப்படி யாருமே கலந்துகொள்ளவில்லை. அவசர அவசரமாய் பதற்றத்தில் நடந்த கூட்டம் அது. ஏற்காடு சித்ரா பேட்டியின்படி அப்படி ஒரு கூட்டமே நடக்கவில்லை.
பல பகுதி நிர்வாகிகளோடு பேசிய சசிகலா எடப்பாடிக்குள்ளேயே புகுந்து நிர்வாகிகளுடன் பேசியிருக்கிறார். அதுவும் எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகளாய் பார்த்துப் பார்த்துப் பேசியிருக்கிறார். எடப்பாடியில் முதல் கூட்டம் நடத்த வேண்டும் என்றதற்கு சரி சரி என்று சொல்லுகிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி கோபமும் அதிர்ச்சியும் அடைந்துதான் இப்படி ஒரு திடீர் கூட்டத்தைப் போட்டதோடு பிற மாவட்டங்களிலும் கூட்டம் போடச் சொல்லியுள்ளார்” என்கிறார்.
**-ராகவேந்திரா ஆரா**
�,”