வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் சசிகலாவின் கொங்கு மண்டல பயணம் தொடர்பான சில படங்களை அனுப்பியது.
அவற்றை பார்த்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ்அப்.
“அதிமுகவின் பொதுச் செயலாளராக உரிமை கொண்டாடும் சசிகலா 11, 12 தேதிகளில் திருச்சியில் தொடங்கி நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, எடப்பாடி, சேலம், ஈரோடு என கோயில்கள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பி இருக்கிறார்.
இந்தப் பயணத்தில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு இடம் எடப்பாடி.
கோவில்கள் தரிசனம் என சொல்லிக்கொண்டு புறப்பட்டிருந்தாலும் சென்ற இடங்களில் எல்லாம் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரையும் சந்தித்திருக்கிறார் சசிகலா. எனவே இது ஆன்மீக பயணத்தோடு சேர்ந்த அரசியல் பயணமாகவே கருதப்படுகிறது.
11 ஆம் தேதி காலை திருச்சியிலிருந்து புறப்பட்டு முசிறி வழியாக சசிகலா நாமக்கல் செல்லும் போதுதான் உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு தகவல் அவருக்குக் கிடைத்தது. இந்தத் தீர்ப்பு பற்றிய தகவல் கிடைத்ததும், “நமக்கு சாதகமாக வந்தா அவங்க அப்பீல் போவாங்க. அவங்களுக்கு சாதகமாக வந்தா நாம அப்பீல் போவோம். இதனால் ஒன்னும் இல்ல’ என்று காரில் போய்க் கொண்டே சொல்லி இருக்கிறார் சசிகலா.
திருச்செங்கோட்டில் மதிய உணவை முடித்துக்கொண்டு சசிகலா அங்கிருந்து புறப்பட்டு செல்லும் வழியில் கொங்கு தனியரசு தலைமையில் திரண்டு வரவேற்பு கொடுத்தார்கள்.
அதை முடித்துக்கொண்டு அன்று மாலை எடப்பாடி எல்லையில் உள்ள கேட்டு கடை என்ற பகுதியை வந்தடைந்தார் சசிகலா. இங்கே சசிகலாவே எதிர்பாராத வகையில் 1500 பேரில் இருந்து 2000 பேர் வரை கூடியிருந்தனர். அங்கிருந்து எடப்பாடி டவுனுக்கு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மெது மெதுவாக நகர்ந்து அரை மணி நேரம் தன் வாகனத்தில் பயணம் செய்தார் சசிகலா. இரண்டு பக்கங்களிலும் திரண்டு நின்று சசிகலாவை அதிமுக தொண்டர்கள் வரவேற்க சசிகலாவுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இன்னமும் பழனிச்சாமி தான் முதலமைச்சர் என்பதைப் போலவே போலீசார் செயல்படுகிறார்கள் என்று சசிகலா ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறார்கள். காரணம் சசிகலாவை வரவேற்க செய்யப்பட்ட ஏற்பாடுகளை எடப்பாடி போலீசார் பல்வேறு வகைகளில் தடுத்திருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் நீர் மோர் பந்தல் திறந்த பிளக்ஸ் போர்டு இன்னமும் எடப்பாடியில் இருக்கிறது. அதேபோல திமுகவின் பிளக்ஸ் போர்டுகளும் இருக்கின்றன. ஆனால் சசிகலாவுக்காக வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளை அகற்ற சொல்லி சசிகலா ஆதரவு அதிமுக நிர்வாகிகளிடம் எடப்பாடி இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணனே பேசியிருக்கிறார். ஆனால் நிர்வாகிகள் அதை அகற்ற முடியாது எனக் கூறி விட்டார்கள். பிறகு அதிமுக கொடிகள் கட்டக்கூடாது என்று அடுத்த உத்தரவு எடப்பாடி போலீசிடம் இருந்து வந்திருக்கிறது. பந்தல் அமைத்த நபர்களை வைத்து சசிகலாவுக்காக வைக்கப்பட்ட அதிமுக கொடிகளை அகற்றி விட்டார்கள் போலீசார். ஆனால் சசிகலா வருகைக்கு சில நிமிடங்கள் முன்பு நூற்றுக்கணக்கான கொடிகளை திடீரென நட்டுவிட்ட அதிமுக நிர்வாகிகள் மீதமுள்ள கொடிகளை தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டனர்.
சசிகலாவின் எடப்பாடி வருகையின்போது எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்தார்.11 ஆம் தேதி மதியம் முதலே எடப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் நகர செயலாளர் முருகன், ஒன்றியச் செயலாளர்கள் கூடி ஒவ்வொரு அதிமுக நிர்வாகிக்கும் போன் செய்து, ‘சசிகலா வரும்போது நீங்க எல்லாம் வரக்கூடாது. உங்க கிட்ட அவங்க சைடுல இருந்து பேசுறாங்கன்னு எங்களுக்கு தெரியும். அதனாலதான் சொல்றோம். நீங்கள் அங்கே போகக் கூடாது’ என்று எடப்பாடியின் கட்டளையை பாஸ் பண்ணி கொண்டிருந்தனர். முன்னாள் மாவட்ட மீனவர் அணி செயலாளர் எடப்பாடி சுரேஷ் தான் சசிகலா வருகை காண அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அவர்தான் அனைத்து அதிமுக நிர்வாகிகளின் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு சசிகலாவை வரவேற்க அழைத்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் மைத்துனர் வெங்கடேஷ் மாலை வாக்கில் எடப்பாடி நகரை சுற்றி வந்து சசிகலாவை வரவேற்க என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை பார்த்து சென்னையில் இருக்கும் எடப்பாடிக்கு தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தார்.
மேலும் எடப்பாடி டவுனுக்குள் சசிகலாவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக சில அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு சென்றிருக்கிறது. ஆனால் அவர்கள் இதற்கு தயங்கியிருக்கிறார்கள். தயங்கியதோடு மட்டுமல்லாமல் சசிகலாவுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் செய்த எடப்பாடி சுரேஷிடமும் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, ‘அப்படி கருப்பு கொடி காட்டினால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். சட்டம் ஒழுங்கு கெட்டுப்போக வாய்ப்பு ஏற்படும்’ என்று சசிகலா ஆதரவாளர்கள் எடப்பாடி ஆதரவாளர்களிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளார்கள். இந்த விஷயம் போலீஸுக்குத் தெரிந்து அதிமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவுக்கு கொண்டு விட்டுவிடாதீர்கள்.கருப்புக் கொடி எல்லாம் காட்ட வேண்டாம் என்று கூறி ஆஃப் பண்ணி இருக்கிறார்கள்.
இப்படி எடப்பாடி பழனிச்சாமியின் பலத்த எதிர்ப்பையும் மீறி எடப்பாடியில் சசிகலாவுக்கு பெரிய அளவு கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள் சசிகலாவின் ஆதரவாளர்கள். 11 ஆம் தேதி மாலை எடப்பாடியில் பெரும் வரவேற்பை பெற்றுக் கொண்டு பர்வத குல மக்களின் பெரும் மரியாதையை பெற்ற தியாகி சின்னாண்டி பக்தர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்கிருந்து புறப்பட்டார் சசிகலா.
எடப்பாடியை விட்டுப் புறப்படும் போது, ‘மத்த ஊரை பற்றி பிரச்சனை இல்ல. இங்க எப்படி இருக்கும்னு உண்மையிலேயே எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஆனா இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு’ என்று தனக்காக ஏற்பாடு செய்த தனது ஆதரவாளர்களிடம் நெகிழ்ந்து போய் கூறி விட்டுச் சென்றிருக்கிறார் சசிகலா.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் வருவதற்குள் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து வைக்குமாறு லோக்கல் அதிமுகவினருக்கு உத்தரவு வந்திருக்கிறது. அதன்படியே அவர்கள் பட்டியலைத் தயார் செய்ய, நீண்டுகொண்டே செல்கிறது பட்டியல்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.