அதிமுகவைச் சேர்ந்த சக்திவேல் ராஜன் என்ற தொண்டர் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது குவைத்தில் பணிபுரிகிறார். இவர் நேற்று (டிசம்பர் 2) மதுரையின் மூத்த அதிமுக பிரமுகரும் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூவிடம் அலைபேசியில் பேசியதை பதிவு செய்து தனது சமூக தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இதோ அந்த உரையாடல்…
அண்ணே…வணக்கம். நான் வில்லாபுரம் சக்திவேல் பேசுறேன் அண்ணே. பராசக்தி நகர்லதான் இருக்கேன். அண்ணே கட்சியில என்ன நடக்குதுணு சீனியர் உங்களுக்கு நல்லாவே தெரியும். கட்சியில அம்மாக்கு அடுத்தபடியா சின்னம்மானுதானே அடையாளம் கொண்டுவந்திருக்கோம். உங்களைப் போல சீனியர்லாம் இதை எடுத்துச் சொல்ல வேணாமாண்ணே…’
‘இருக்குய்யா… அப்படித்தான் யா இருக்கு. தம்பி சக்தி நீ அங்க இருக்கிறதால சொல்றேன். நாங்களும் அதைத்தான் விரும்புறோம். அதுக்கு முறையா போகணும் தம்பி. இல்லேன்னா மொத்தமா இழந்துட்டுப் போயுடுவோம். அவங்க கைப்பத்திட்டு போயிடுவாங்க தம்பி. அதுக்காகதான் கம்முனு இருக்கோம். அதெல்லாம் நடந்துக்கிட்டுதான் இருக்கு:
‘நீங்கள்லாம் விட்டுறக் கூடாதுன்ணே…காலம் கைமீறி போயிடக் கூடாதுண்ணே’
‘அதெல்லாம் கரெக்டா போயிக்கிட்டிருக்கு. நாங்க விட்டுர மாட்டோம். இப்ப ஃபுல்லா அந்தப் பக்கம் எடுத்து வச்சிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமாக அடிச்சு காலிபண்ணிட்டுதான் இது பண்ணனும்”
’ஜெயக்குமாரும் சிவி. சண்முகமும் யாருண்ணே அதிமுகவை வழி நடத்துறதுக்கு….
‘அவங்க கெடக்குறாய்ங்க…. தலைவர் சட்டமன்றத்துக்கு போகும்போது தலைவரை செருப்பால அடிச்சவன் ஜெயக்குமாரோட அப்பன். அப்ப அவன் மாவட்டச் செயலாளரு. அதெல்லாம் தெரியாமயா இருக்கும். பாத்துக்கலாம்ப்பா… நாளைக்கு மாவட்டக் கழக கூட்டம் போட்டிருக்கேப்பா. பேசுறேன்”
இப்படியாக முடிகிறது அதிமுக தொண்டர் சக்திவேல்- செல்லூர் ராஜூவின் உரையாடல்.
அதாவது இப்போது கட்சி முழுவதும் எடப்பாடி கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அதை முறையாகப் போய்தான் அடித்து காலிபண்ண வேண்டும், அவசரப்பட்டால் கட்சி மொத்தமும் எடப்பாடி கைக்குள் போய்விடும் என்று மனம் திறந்து சொல்லியிருக்கிறார் செல்லூர் ராஜூ.
ஏற்கனவே பாஜக கூட்டணியை எதிர்த்ததாலும் சசிகலாவை வெளிப்படையாக ஆதரித்ததாலும் எம்.ஜி.ஆர். காலத்து ஆளுமையான அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இப்போது எடப்பாடிக்கு எதிரான இந்த வியூகத்தை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் செல்லூர் ராஜூ. இதனால் இவரும் நீக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிமுகவில் ஏற்பட்டிருக்கிறது.
**-வேந்தன்**
�,”