சசிகலா மீது சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் கொடுத்திருக்கிறார்.
நேற்று (அக்டோபர் 20) இரவு ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,
“அதிமுகவில் வீண் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு அதிமுக அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சசிகலா, தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறி கல்வெட்டு வைப்பதும், அதிமுக கொடி கட்டிய காரை பயன்படுத்துவதும் அதிமுக கொடியை ஏற்றுவதும் சட்டத்தை மதிக்காத செயல்.
டெல்லி உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவை இது தொடர்பாக தீர விசாரித்து அதிமுக என்பது இபிஎஸ், ஓபிஎஸ் வசம்தான் என்று தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில் அந்தத் தீர்ப்பை எதிர்த்து சசிகலா உச்ச நீதிமன்றத்துக்கு சென்று உச்ச நீதிமன்றமும் அந்த தீர்ப்பை உறுதிப்படுத்திவிட்ட நிலையில். அதையும் விடாமல் சீராய்வு மனு போட்டார் சசிகலா. அதையும் தள்ளுபடி செய்துவிட்டது.
இப்படி எல்லாமே தெளிவாக இருக்கும் நிலையில் திருமதி சசிகலா குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இது சட்டத்துக்கு உட்பட்ட விஷயமல்ல. தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி. நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரான செயல். சட்டத்தை மதிக்காமல் வீண் குழப்பத்தை உள்நோக்கத்தோடு திட்டமிட்டு சசிகலா செய்து வரும் செயல் சட்டப்படி ஏற்கத் தக்கதல்ல. அதனால் அவர் மீது சட்ட ப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று ஆர் 1 காவல்நிலையத்திலே புகார் கொடுத்திருக்கிறோம்.
ஆனால் எங்கள் புகாருக்கு ரசீது கூட கொடுக்க போலீஸார் தயங்குகிறார்கள். மேலே கேட்டு தருவதாக சொல்கிறார்கள். அரைமணி நேரமாகக் கேட்டும் இதே பதிலையே சொல்கிறார்கள். இதில் இருந்து சசிகலாவுக்கு திமுக அரசு ஆதரவாக இருப்பது தெளிவாகிறது” என்று தெரிவித்துள்ளார்.
**-வேந்தன்**
�,