qசசிகலா விடுதலையாகி முதலில் செல்வது எங்கே?

Published On:

| By Balaji

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா வரும் ஜனவரி 27-ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி சென்று வந்ததன் அடிப்படையில்… சசிகலா குறிப்பிட்ட தேதிக்கு சில தினங்கள் முன்னதாகவே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் 27 அல்லது அதற்கு முன் எந்த தேதியில் சசிகலா விடுதலையானாலும் அவருக்கு மிக பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு கொடுக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தயாராகி வருகிறது.

ஒருவேளை 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார் என்றால் சிறை நிர்வாக அலுவலர் தனது கடமைகளை முடித்து சசிகலாவை சிறையில் இருந்து விடுவிக்க பகல் பொழுது ஆகிவிடலாம். அங்கிருந்து கார் மூலம் சசிகலா தமிழ்நாடு கர்நாடக எல்லையான ஓசூர் வரும் வரையில் கர்நாடக போலீசார் உடன் வருவார்கள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் சசிகலா தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் புள்ளி என்பதால் தமிழக எல்லை வரை அவரை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது கர்நாடகா காவல்துறையின் கடமையாகிறது.

ஓசூர் வருவதற்குள் இரவாகி விட்டால் அங்கேயே தங்கி மறுநாள் காலை சென்னைக்கு புறப்படுவது என்ற ஒரு திட்டமும் சசிகலா தரப்பில் இருக்கிறது.

இதற்கிடையே அமமுக மாவட்ட செயலாளர்கள் சிலரிடம் நாம் பேசியபோது… சசிகலா விடுதலையாகி வரும்போது தமிழ்நாடு எல்லையில் இருந்து சென்னை வரை அடுக்கடுக்கான வரவேற்பு ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. எங்கள் கட்சியில் இப்போது சுமார் 70 மாவட்ட அமைப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்ட அமைப்புக்கும் ஒவ்வொரு பாயின்ட் கொடுக்கப்பட இருக்கிறது. இதற்கான வரையறை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் வரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடிகளும் தொண்டர்களும் அவர் வரும் வழி முழுவதும் நிறைந்து இருக்குமாறு மாவட்ட அமைப்புகள் மூலம் ஏற்பாடுகள் நடக்கின்றன. இன்னும் சில தினங்களில் ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கு அவர்களது வரவேற்பு பாயின்ட் எது என்ற தகவல் அனுப்பப்படும்.

எங்களுக்கு இப்போது கிடைத்துள்ள தகவல்படி சசிகலா சிறையில் இருந்து புறப்பட்டு சென்னையில் அவர் வீட்டுக்குச் செல்ல போவதில்லை. நேரடியாக மெரினா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு தான் அவர் செல்கிறார். சென்னையை எந்த நேரத்தில் அடைந்தாலும் அவர் நேராக ஜெ. நினைவிடத்துக்குத்தான் செல்ல இருக்கிறார்.

எப்படி 2017 ஆம் ஆண்டு ஜெயலிதா சமாதியில் சபதம் செய்துவிட்டு சிறைக்கு புறப்பட்டாரோ அதேபோல சிறையில் இருந்து நேரடியாக ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு தான் சசிகலா வருவதற்கு விரும்புகிறார். ஜெயலலிதாவை வணங்கிவிட்டுத்தான் தனது வீட்டுக்கே செல்லப் போகிறார் என்பதுதான் இப்போதைய தகவல்” என்கிறார்கள்

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share