‘எனக்கென தனி வழி எதுவும் கிடையாது’ என்றும், ‘எம்ஜிஆர் ஜெயலலிதாவின் வழியே என் வழி’ என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தில் ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா நேற்று (ஏப்ரல் 12) ஈரோடு மாவட்டம் அத்தானி பகுதியில் கோயில்களுக்குச் சென்று வந்தார். அங்கே திரளாக திரண்ட அதிமுக தொண்டர்களிடம் மைக் பிடித்து சிறிது நேரம் பேசினார்.
“பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மீது அளப்பரிய பிரியம் வைத்திருந்தார். இதனடிப்படையில் எம்ஜிஆர் அப்போது அண்ணாவின் இயக்கத்துக்காகப் பெரும்பாடு பட்டார். அண்ணா மறைவுக்குப் பின்னர் எம்ஜிஆரை வெளியே தூக்கிப் போட்டனர். அப்போது தொண்டர்கள் ராமாவரம் தோட்டத்தில் புகுந்து புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்று எம்ஜிஆரை வற்புறுத்தினர்.
அப்போது எம்ஜிஆர், தான் புதிதாக உருவாக்கும் கட்சியில் இது போல நான்கைந்து பேர் சேர்ந்து கொண்டு யாரையும் வெளியேற்ற கூடாது என்பதற்காகவும், பணம் படைத்தவர்கள், அதிகாரம் உள்ளவர்கள் பதவியைப் பறித்துக்கொள்ள கூடாது என்பதற்காக தொண்டர்கள், அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்ற சட்டத்திட்ட விதியை கொண்டு வந்தார்.
கழகப் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும் உரிமையைக் கழகத் தொண்டர்களிடம் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் எம்ஜிஆர். இந்த சட்டத்திட்ட விதிகளில் அம்மா கை வைக்கவில்லை. ஏனென்றால் தொண்டர்கள் தன் பின்னால் இருக்கிறார்கள் என்பது அம்மாவுக்குத் தெரியும்.
அதேபோல இன்றைக்கும் சொல்கிறேன். அதிமுக என்ற இயக்கத்தை யார் நடத்த வேண்டும் என்பது உங்களுக்கு – தொண்டர்களுக்குத் தெரியும். ஒன்றரை கோடி தொண்டர்களின் மனது தான் இதை முடிவு செய்ய முடியும். இதில் நான் ரொம்ப திடமாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறேன். அதனால் யாரும் கவலைப்படாதீர்கள். மிக விரைவில் நமது ஆட்சி வரும்” என்று பேசினார் சசிகலா.
மேலும் அவர், “நான் வரும் வழியில் அதிமுக கொடிகளை தொண்டர்கள் கட்டியிருந்தார்கள். அவற்றை போலீஸார் அகற்றச் சொல்லி இருக்கிறார்கள். போலீஸாருக்கு இப்படி உத்தரவிட்டது யார்? அரசாங்கமா அல்லது நமக்கு வேண்டாதவர்களால் சில போலீஸ் நிலையங்களில் போடப்பட்ட அதிகாரிகள் தன்னிச்சையாகச் செய்கிறார்களா? இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். எப்போதுமே எம்ஜிஆர் வழியிலும் அம்மா வழியிலும் மட்டுமேதான் நான் செல்வேன். எனக்கென்று தனி வழி எல்லாம் கிடையவே கிடையாது” என்றும் குறிப்பிட்டார் சசிகலா.
‘எனக்கென்று தனி வழி எதுவும் கிடையாது’ எனக் குறிப்பிட்டதன் மூலம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு சசிகலா வெளிப்படையான மெசேஜ் அனுப்பி இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் சசிகலாவின் உடன் இருப்பவர்கள்.
**வேந்தன்**