அதிமுகவில் சசிகலா: எடப்பாடிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!

Published On:

| By Balaji

அதிமுகவில் சசிகலாவுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கவேண்டும் என்று ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

2017இல் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து சென்னை மண்ணடியிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்கக் கட்டிகளைக் கொடுத்து, பறக்கும் பருந்துக்கு பயந்து, கோழி தனது குஞ்சுகளை பாதுகாப்பதுபோல், எம்.எல்.ஏ,களை பாதுகாத்து கட்சியை டிடிவி தினகரனிடமும், ஆட்சியை எடப்பாடியிடமும் ஒப்படைத்துவிட்டு பெங்களூர் சிறைக்குச் சென்றுவிட்டார் சசிகலா.

சசிகலா சிறைக்கு சென்ற சில மாதங்களிலேயே ஒன்றிய பாஜக அரசின் ஆதரவோடும் ஆசியோடும்… தினகரனை ஒதுக்கி அவரையும் டெல்லி திகார் சிறைக்கு அனுப்பி சசிகலாவையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள் எடப்பாடியும், பன்னீரும்.

நான்கு ஆண்டு சிறைவாசம் முடித்துவிட்டு 2021 ஜனவரி மாதம் ரிலீஸான சசிகலாவுக்கு ஜெயலலிதா சமாதிக்கு வருவதற்குத் தடைபோட்டார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தி. நகர் வீட்டில் அமைதியாக இருந்துவந்தவர் சில ஆதரவாளர்களைத் தொடர்புகொண்டு நலம் விசாரித்துவந்தவர், கடந்த 16ஆம் தேதி அதிமுக கொடியைப் பறக்கவிட்ட காரில் ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். அடுத்த நாள் எம்.ஜி.ஆர் வீட்டில் அதிமுக கொடியேற்றி, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று கல்வெட்டும் திறந்துவைத்தார்.

இடையில் சசிகலாவுக்கும் ஒபிஎஸ்.சுக்கும் பாலமாக இருந்துவந்த ஒபிஎஸ் மகன் ஜெயபிரதீப் எடப்பாடியிடம் பேசியுள்ளார். இதன் பின் பன்னீரும் எடப்பாடியும் நேரடியாகப் பேசியுள்ளனர். அப்போது ஓ.பன்னீர் செல்வம், ‘அந்த அம்மாவை (சசிகலா) கட்சியில் சேர்த்து பொறுப்பு கொடுத்துவிடலாம். அதுதான் இந்த சூழலுக்கு கட்சிக்கு நல்லது’ என்று கூறியுள்ளார். எடப்பாடியோ, ‘கட்சியில் தனி தலைமை பொறுப்பு கொடுக்கமுடியாது. இப்போது உள்ளது போல் துணை, இணை பதவி வேண்டுமானால் கொடுக்கலாம் என்று இபிஎஸ் சொல்லியுள்ளார். இந்த தகவல்கள் சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டதும், ‘யாருக்கு யார் பொறுப்பு கொடுப்பது?’ என்று எடப்பாடியை தடித்த வார்த்தையால் திட்டியுள்ளார் சசிகலா.

இந்த தகவல் எடப்பாடிக்குக் கிடைத்துள்ளது. உடனே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மற்றும் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் போன்றவர்களை அழைத்து, ‘ ஒபிஎஸ் சசிகலாவைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பேசிவருகிறார் என்று வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். அதன் பிறகு விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது தனியாக சுற்றுப்பயணம் சென்றார். ஆளுநர் சந்திப்பின் போதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீரை அழைத்துச் செல்லவில்லை.

இதன் இடையில் நடராஜனின் சகோதரர் எம்.ஆர்.என்ற ராஜேந்திரன் சசிகலா ஆலோசனைகள் படி அதிமுகவிலிருந்து விலகி நிற்பவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள், சாதிக்கார எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிவருகிறார். அதிமுகவின் சீனியரான சைதை துரைசாமியிடமும் அவர் பேசியுள்ளதாகச் சொல்கிறார்கள். அனைவரையும் ஒன்று கூட்டி பெரிய மாஸ் காட்டுவதுதான் சசிகலா திட்டம். இதன் பின்னணியில் டிடிவி தினகரனுக்கு சில அசைன்மெண்ட் கொடுத்துள்ளார் சசிகலா” என்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்.

சமீபத்தில் கவர்னர் மாளிகை வெளியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இபிஎஸ், சசிகலாவை நேரடியாக தரக் குறைவாகப் பேசினார். இதைக் கேட்டு சசிகலா ஆதரவாளர்கள் கொதித்துப்போய் ராமநாதபுரம், திருவாரூர் , ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் எடப்பாடி கொடும்பாவியை எரித்து ஆர்பாட்டம் செய்தார்கள். தேவர் குரு பூஜைக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவோம் என்று தென் மாவட்ட அதிமுகவிலும் சில தயாராகி வருகின்றனர்.

இத்தனை சம்பவங்களுக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் ஒரு எதிர்ப்புகூட காட்டவில்லை. மாறாக நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “ கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த கொள்கைதான் அதிமுகவின் பூர்வாங்கக் கொள்கை, அரசியல் இயக்கத்திற்குத் தலைமை தாங்கி இருப்பவர்கள் பிறரை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யும்போது கண்ணியத்தோடு வார்த்தைகளைப் பயன்படுத்தவேண்டும் தொண்டனாக இருந்தாலும் சரி உயர்ந்த பொறுப்பில் இருக்கும் தலைவராக இருந்தாலும் சரி” என்று எடப்பாடியைக் குறிக்கும் வகையில் பேசினார்.

அப்போது பன்னீர் செல்வத்தின் அருகில் முன்னாள் அமைச்சர்களான மணிகண்டன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.வி.உதயகுமார் போன்றவர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

சசிகலா தரப்புடன் கலந்து பேசியபிறகு, அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ,கள் முன்னாள் எம்.எல்.ஏ.க்ககளை அழைத்து மினி மீட்டிங் நடத்திய பிறகுதான் எடப்பாடிக்கு எதிராகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம் என்கிறார் அதிமுக நிர்வாகி ஒருவர்.

இந்த நிலையில் இன்று காலை 8.45 மணிக்குச் சென்னை தி நகர் அபிபுல்லா நகரிலிருந்து தஞ்சைக்குப் புறப்பட்ட சசிகலா, தனது காரில் வழக்கம்போலவே அதிமுக கொடியைப் பறக்கவிட்டுள்ளார். தஞ்சையில் நடைபெறும் டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு அங்கே சிலரைச் சந்தித்து பேசிவிட்டு, ஒரு நாள் முன்னதாக 28ஆம் தேதி, போலீஸ் அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் தேவர் குருபூஜைக்குச் செல்லும் சசிகலாவுக்கு வழி நெடுக்க பலமான கூட்டத்தைக்கூட்டி வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது அதிமுக வில் நடந்துவரும் பல சம்பவங்களைப் பற்றி அதிமுக உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் விசாரித்தோம்.

“அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு நாளை அக்டோபர் 27ஆம் தேதி வருகிறது. அதை ஒருபக்கம் எதிர்பார்த்திருக்கும் சசிகலா இன்னொரு பக்கம் கட்சி ரீதியான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளார். இதன் விளைவாக சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள அதிமுகவுக்குள்ளே குரல் பலம் அதிகரித்துவருகிறது. எடப்பாடிக்கு நம்பிக்கையான முன்னாள் அமைச்சர் வேலுமணியே அமைதியாகத்தானே இருந்துவருகிறார். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். அவருக்குப் போட்டியாக எடப்பாடியும் சுற்றுப்பயணம் செய்ய ஆலோசனைகள் செய்துவருகிறார். அதையும் தாண்டி சசிகலாவும் சுற்றுப் பயணத்திற்குத் திட்டம் வகுத்து வருகிறார். மீண்டும் அதிமுக இரண்டாக பிளந்து இரட்டை இலை சின்னம் முடங்கிவிடக் கூடாது என்று நினைக்கிறார் சசிகலா. அதனால்தான் கட்சி ரீதியாக இதை பேசி முடிவு செய்ய தீவிரமாக இருக்கிறார்” என்கிறார்கள்.

**-வணங்காமுடி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share