`கும்பகோணம்: ஆட்டோ ஓட்டுநர் டூ மேயர்!

politics

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக ஆட்டோ ஓட்டுநர் சரவணன் இன்று பொறுப்பேற்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. மொத்தம் 48 வார்டுகளை கொண்ட இந்த மாநகராட்சிக்குக் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள்42 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சி மேயர் பதவியைத் தக்க வைத்தன.

திமுக 37, காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய முஸ்லீம் லீக் கட்சி ஆகிய கட்சிகள் தலா1 இடத்திலும் வெற்றி பெற்றன. அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தலா 3 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.

கும்பகோணம் மாநகராட்சி முதல் மேயர் பதவிக்கான வாய்ப்பை திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு வழங்கியது. காங்கிரஸ் சார்பில் 17ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் திமுக கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளதால் ஆட்டோ ஓட்டுநர் சரவணன் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேயர் ஆனது குறித்து பிபிசிக்கு சரவணன் அளித்துள்ள பேட்டியில், “20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். முன்னதாக வாடகை ஆட்டோ ஓட்டிய நான் 7 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறேன். ஆட்டோ ஓட்டுநர் என்பதால் எனக்கு அனைத்து வார்டுகளும் அத்துப்படி. அங்கு என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்பதை நேரடியாக அறிந்தவன். எனவே மக்களின் தேவைகளை தடையின்றி நிறைவேற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

“சொந்தமாக ஆட்டோ வைத்திருந்தாலும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறேன். 1976ஆம் ஆண்டு கும்பகோணம் நகராட்சி உறுப்பினராக எனது தாத்தா குமாரசாமி பதவி வகித்தார். அவரால் தான் காங்கிரஸ் கட்சியின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியின் நகரத் துணைத் தலைவராக உள்ளேன். கட்சி என் மீது நம்பிக்கை வைத்துத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, தற்போது மேயராகவும் ஆக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.