�
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவும் அதைத் தொடர்ந்து வரும் சித்திரை தேர்த்திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா நாட்களில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாகவும் வந்து வழிபட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக நோய் பரவுவதைத் தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு தினசரி கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் 8ஆம் தேதி தொடங்கப்பட்ட பூச்சொரிதல் விழா நேற்று (ஏப்ரல் 4) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து வழக்கமாக சித்திரை தேர் திருவிழா தொடங்கி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதை பொருட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சித்திரை தேர் திருவிழாவின் கொடியேற்றம், தேரோட்டம் என்று அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
“அம்மனுக்குக் காப்பு கட்டி விரதம் மேற்கொள்ளும் அனைத்து பக்தர்களும் தங்கள் வீட்டிலேயே இன்று (ஏப்ரல் 5) அம்மன் படத்தை வைத்து நைவேத்தியமாக தயிர்சாதம், இளநீர், கஞ்சி, நீர்-மோர் பானகம் முதலியனவற்றை வைத்து மாலையைக் கழற்றி, காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்ளலாம்” என்று கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
�,