bசபரீசன் பேசியதை சபையில் உடைத்த கமல்

Published On:

| By Balaji

திமுகவில் இருந்து மக்கள் நீதி மய்யத்தோடு தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நேற்று (பிப்ரவரி 21) கட்சியின் ஆண்டு நிறைவை ஒட்டி செய்தியாளர்களைச் சந்தித்த கமல் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொன்ன கமல்ஹாசன், “திமுகவில் இருந்துகூட எங்களோடு தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசினார்கள். ஆனால் என்னிடம் நேரடியாகப் பேசவில்லை. தூதுவர்களாக சிலர் பேசினார்கள். அக்கட்சியின் தலைமையிடம் இருந்து என்னிடம் பேசினாலோ, கேள்வி கேட்டாலோதான் கணக்கு. அதனால் நான் அதையெல்லாம் எடுத்துக் கொள்வதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யத்தை திமுக அணியில் அமைக்க திமுக தலைவர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் மூலமாக சில முயற்சிகள் தொடர்ந்து நடந்ததை நாம் மின்னம்பலத்தில் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தோம்.

அதில் ஒரு செய்தியாக [கமல் உள்ளே வருவாரா? காங்கிரஸ் வெளியே போகுமா? திரைமறைவில் நடக்கும் பேச்சுவார்த்தை]( https://minnambalam.com/politics/2021/02/14/22/Sabareesan-Kamal-Hasan-Rahul-Gandhi-Back-door-discussions) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அந்தச் செய்தியில். ‘திமுக கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளுக்கு எவ்வளவு சீட் ஒதுக்கீடு என்பது பற்றித்தான் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள். உண்மையில் வெளிப்படையாக அதுதான் நடக்கிறது. ஆனால் ஸ்டாலினும், அவருடைய மருமகன் சபரீசனும் யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி சில பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி நடக்கும் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் முக்கியமானது, கமலுடன் நடக்கும் பேச்சுவார்த்தை. கடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கிய 41 சீட்களில் 21 சீட்களை கமல் கட்சிக்கு ஒதுக்கி விடலாம் என்பதுதான் சபரீசனின் திட்டம். திமுக கூட்டணிக்குள் அவரை கொண்டு வருவது குறித்து கமலிடம் சபரீசன் தொடர்ந்து அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். நேரடியாக சில விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்பதற்காக, தொழிலதிபர் மார்ட்டினின் மருமகன் அர்ஜுன் மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போதுதான் திமுக கூட்டணிக்கு வந்தால் 21 சீட்டுகள் கண்டிப்பாகத் தருகிறோம் என்று கமலுக்கு உறுதி தரப்பட்டிருக்கிறது.

ஆனால், கமல் உடனடியாக எந்தப் பதிலும் தரவில்லை. யோசித்துச் சொல்வதாகச் சொல்லி அனுப்பிவிட்டார். இந்தத் தகவல் உளவுத்துறை மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் போய்விட்டது. உடனே அவரும் தன் சார்பில் ஒரு தூதுவரை அனுப்பி கமலிடம் பேசியிருக்கிறார்.

இருந்தாலும் சபரீசன் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. பொதுவெளியில் கமல் இதைப் பேசவில்லை என்பதால் இன்னும் அவர் கமலுடன் பேசிக்கொண்டே இருக்கிறார். விஜய் டிவியில் முன்பு பணியாற்றிய மகேந்திரன், இப்போது கமலுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். அவர்தான் ‘கமல் திமுக கூட்டணிக்குக் கண்டிப்பாக வருவார். தேர்தல் தேதி அறிவித்ததும் அதற்கான முயற்சிகள் வேகமெடுக்கும்; நிச்சயம் நல்ல முடிவுக்கு வரும்’ என்று சொல்லியிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் சபரீசன் நம்பிக்கையுடன் இருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில்தான் திமுக தலைமை தன்னிடம் பேசாமல் தூதுவர்களை விட்டுப் பேசவைத்தது என்பதை போட்டு உடைத்துவிட்டார் கமல்ஹாசன். ஏற்கனவே மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு மேடையில் திமுகவையும், அதிமுகவையும் பழ.கருப்பையா கடுமையாக சாடியதையும் ரசித்தார் கமல். குறிப்பாக திமுகவின் குடும்ப அரசியலை பழ.கருப்பையா தனக்கே உரிய பாணியில் எள்ளி நகையாடுவதை கால் மேல் கால் போட்டு ரசித்துக் கொண்டிருந்தார் கமல்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் யாராலும் அணுகப்படாமல் கைவிடப்பட்ட கட்சியல்ல, திமுகவே எங்களிடம் பேசியது என்பதைச் சொல்வதற்காகத்தான் சபரீசன் பெயரைக் குறிப்பிடாமல் அவர் பேசிய விஷயத்தை மட்டும் சபையில் வைத்திருக்கிறார் கமல்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share