திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூன் 14 ஆம் தேதி அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமயில் காணொலிக் காட்சி மூலமாக நடந்தது.
இதில் பேசிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், “ஓபிசி இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறது அதை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும்” என்று கூறியபோது குறுக்கிட்ட ஸ்டாலின், “அதற்காகத்தான் உச்ச நீதிமன்றம் சென்றோம். அதன் பின் உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி இப்போது உயர்நீதிமன்றம் சென்றுள்ளோம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன், “சில வருடங்களாகவே தமிழக அரசுப் பணி நியமனங்களில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையுள்ளவர்களை திட்டமிட்டு நுழைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. டி.என்.பிஎஸ்.சி., தமிழகத்தின் மத்திய அரசுப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அதிக அளவு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுக்கவில்லை என்றால் எல்லா அரசுப் பணிகளுமே ஆர்.எஸ்.எஸ். வசம் போய்விடும். அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார். அதை ஸ்டாலின் தன் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டார்.
தமிழக அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவர் சேர்வது குறித்து பல கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், திமுகவின் மாசெக்கள் கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் இந்த கருத்தை அடிப்படையாக வைத்து விரைவில் திமுக போராட்டங்களை வகுக்கக் கூடுமென்கிறார்கள் திமுக நிர்வாகிகள் வட்டாரத்தில்.
**-வேந்தன்**
�,