பழைய பழனிசாமி-புது பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி கூறும் வித்தியாசங்கள்!

Published On:

| By Gracy

ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, ‘என்னை பழைய பழனிசாமினு நினைச்சுட்டீங்களா… நடக்காது ஸ்டாலின் அவர்களே…’ என்று பேசினார். மேலும் ஓ.பன்னீருக்கு திமுகவே உதவுகிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு அன்றே பதிலளித்திருந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இன்று (ஜூலை 13) மீண்டும் ஓர் அறிக்கை மூலம் பதிலளித்து எடப்பாடிக்கு சில சவால்களையும் விடுத்திருக்கிறார்.

அந்த அறிக்கையில், “தானே கூட்டி, தன்னையே தலைமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொதுக்குழுவில் பேசிய ‘தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்’ எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார். பழைய பழனிச்சாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா.. நடக்காது ஸ்டாலின் அவர்களே என்று மைக்கைக் கடித்தபடி பேசியிருக்கிறார்.

அவர்களின் கட்சியில் வான(க)ரக் கூட்டம், ராயப்பேட்டை ரவுடிகள் கலவரம் என எதிரும் புதிருமாக கோஷ்டி மோதல்கள் நடத்திக்கொண்டு, தி.மு.க. மீது பாய்வது என்பது, திசைத் திருப்புகிற வேலையன்றி, வேறு எதுவுமல்ல.

அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது அதற்கு டெல்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள். இப்போது பழனிசாமி – பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டெல்லிதான் நேரடி எஜமானர்கள்.

அங்கே கயிறு இழுக்கப்படுவதற்கேற்ப இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன. ஆடும் பொம்மைகளுக்கு வெற்று வசனங்கள் எதற்கு?

பழனிசாமி எதற்காகத் திடீரென பழைய பழனிசாமி பற்றி அவரே நினைவூட்டிக் கொள்கிறார்?

பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார்; புது பழனிசாமி கொடநாடு வழக்கை எதிர்கொள்கிறார். பழைய பழனிசாமி ஜெயலலிதா – சசிகலா கால்களில் விழுந்து கிடந்தார்; புது பழனிசாமி மோடி – அமித்ஷா கால்களில் விழுந்து கிடக்கிறார்.

பழைய கூவத்தூர் பழனிசாமி சசிகலாவின் கால்களை நோக்கித் தவழ்ந்தார்; புது வானகரப் பழனிசாமி, தரையில் தவழ்ந்து – கரன்சிகளைக் கொட்டிக் கொல்லைப்புறமாக நுழைந்துப் பெற்ற பதவியால் கொள்ளையடித்தப் பணத்தை, தனக்குத் தானே முடிசூட்டிக்கொள்ள வாரி இறைக்கிறார்” என்று கூறியுள்ள ஆர்.எஸ்.பாரதி மேலும்,

“வழக்குகள் போட்டு தி.மு.க. பழி வாங்குகிறது என்று பொங்கிய பழனிசாமி, வருமான வரித் துறை – அமலாக்கத்துறை – சி.பி.ஐ என அவரது ஆட்சிக்காலத்திலேயே ஒன்றிய அரசின் துறைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எப்போதாவது குரல் உயர்த்தியது உண்டா?

இப்போதுகூட அவருடைய ஆட்சிக்காலத்து அமைச்சர்கள் முதல் ஒப்பந்தக்காரர்கள் வரை பலருக்கும் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியிருக்கிறதே?

பொதுக்குழுவில் தி.மு.க.வை நோக்கிப் பொங்கிய பழனிசாமி, ஒன்றிய பா.ஜ.க. அரசு பழிவாங்குகிறது என்று பொங்க வேண்டாம், முணுமுணுக்கக்கூட தைரியம் உண்டா?

தி.மு.க. குடும்ப அரசியல் நடத்துகிறது என்று வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு, தனது ஆட்சிக்காலம் முழுவதும் குடும்ப டெண்டர் அரசியல் நடத்தியவர்தான் பழனிசாமி. இதோ அண்மையில்கூட கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைகளில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சோதனைக்குள்ளான இந்த இருவரும் யார்?

முத்துக்கு முத்தாக – ‘சொத்துக்குச் சொத்தாக’ என்பதுபோல ஒன்றுக்குள் ஒன்றான குடும்ப உறவுகள் மூலம் அரசாங்கத்தின் கஜானாவை சுரண்டிக் கொழுப்பதற்காக பழனிசாமி ஆட்சியில் ஒப்பந்தங்களைப் பெற்றவர்கள்தானே?

அவர்கள் மூலமாக உங்கள் ஆட்சியில் எப்படி அரசுப் பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறீர்கள் என்று உங்கள் டெல்லி எஜமானர்களின் நிர்வாகத்தில் உள்ள வருவமான வரித்துறை சோதனை நடத்தி வெளிப்படுத்தியிருக்கிறது.

எங்கே ஒரே ஒரு வார்த்தை, “பழைய பழனிச்சாமினு நினைச்சிக்கிட்டீங்களா, மோடி அவர்களே” என்று பேசிப் பாருங்களேன். உங்களின் பழைய கதை, புதிய கதை என எல்லாக் குப்பைகளும் கிளறப்படும். அதன் நாற்றத்தை உங்கள் கட்சியினராலேயே தாங்க முடியாது துணிவிருந்தால் – நேர்மையிருந்தால் கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய 500 கோடி ரூபாய் வருமானம் பற்றியும் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்றும் பதில் சொல்லுங்கள் பழனிசாமி” என்று கேள்விகளைத் தொடுத்துள்ளார் ஆர்.எஸ். பாரதி.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share