ஆர்.எஸ்.பாரதி மீதான எஸ்.சி, எஸ்.டி. வழக்கு: நடந்தது என்ன?

Published On:

| By Balaji

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது பற்றி சேலத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, “ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ததற்காக என் மீதும், அரசின் மீது குற்றம்சாட்டி ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது வேடிக்கையாக இருக்கிறது. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களை விமர்சித்து பேசியதால் ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சியைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது” என்று விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து காவல்துறையிடம், ‘எப்படி பாரதி வெளியே வந்தார்? என்ன நடந்தது?’ என்று கேட்டிருக்கிறார். போலீஸார் முதல்வருக்கு, “ஆர்.எஸ்.பாரதிக்கு ரிமாண்ட் அளித்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் அவர் தனக்கு 71 வயதாகிறது என்றும், கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் ரிமாண்டை நீதிபதி தள்ளி வைத்திருக்கிறார்” என்றும் ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு, கைது, விடுதலையில் என்ன நடந்தது என்று சட்ட வட்டாரத்தில் விசாரித்தோம்.

சாதாரண குற்றவியல் வழக்குகளில் புகாரைப் பெற்றுக் கொண்டு சப் இன்ஸ்பெக்டரே வழக்குப் பதிவு செய்து புலனாய்வு செய்யலாம். கொலைக் குற்ற புகார்களில் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர்தான் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்து விசாரிக்க முடியும். இதுபோல் குற்றங்களின் தன்மையைப் பொறுத்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும் அதிகாரிகளின் அந்தஸ்து மாறுபடுகிறது. அந்த வகையில் தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி, வன்கொடுமைப் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்து புலனாய்வு செய்யும் அதிகாரம் டிஎஸ்பி லெவல் அதிகாரிகளுக்கே உண்டு. மாவட்டப் பகுதிகளில் டி.எஸ்.பி. என்றால், மாநகரப் பகுதிகளில் ஏசி (உதவி ஆணையர்)தான் வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்ய முடியும்.

ஆர்.எஸ்.பாரதி மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் உடனடியாக அப்பகுதி ஏசியிடம் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏசி அந்த புகார் தாரரை அழைத்து விசாரித்து அவரிடம் ஒரு ஸ்டேட்மென்ட் வாங்க வேண்டும். அதற்குப் பின் புகார் சொல்லப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை அழைத்து விசாரித்திருக்க வேண்டும். அதன் பின்னரே கைது செய்ய முடியும். ஆனால் மதுரை ஆதித் தமிழர் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் ஏ.சி. க்கு அனுப்பப்படாமல், நேரடியாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் மத்திய குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர் சிறைக்கு சென்றபிறகே ஜாமீன் எடுக்க முடியும். அல்லது நீதிமன்றத்தில் சரண்டராகி ஜாமீன் பெறலாம். கைதாவதைத் தடுக்கும் வகையிலான முன் ஜாமீன் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்குக் கிடையாது. கொலை வழக்கில் கூட முன் ஜாமீன் கிடைக்கும். ஆனால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு முன் ஜாமீன் கிடையாது.

இந்த நிலையில்தான் ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி புகார் கொடுக்கப்பட்டதுமே பாரதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யும்படி வழக்கு தொடுக்கப்பட்டது. பாரதியின் பேச்சு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி குற்றமாகாது என்றும், இந்த புகாரால் நேரடியாக பாதிக்கப்பட்டவரே புகார் கொடுத்திருக்க வேண்டும், பொதுவாகக் கொடுக்கப்படும் புகார்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்குள் வராது என்று கூறி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடுத்தார் ஆர்.எஸ்.பாரதி. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கலான நிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடப்பட்டன.

மேலும் உச்ச நீதிமன்றம், ‘நிலுவையில் இருக்கும் எஃப்.ஐ.ஆர்.கள் மீது ஊரடங்கு காலத்தில் கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ள வேண்டாம். சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் பெரிதாக ஏற்படாது என்ற நிலையில் கைது நடவடிக்கை வேண்டாம்’ என்று மாநில உள் துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி ஆர்.எஸ்.பாரதியை அவசர அவசரமாகக் கைது செய்திருக்கிறது. இதுபோன்று அரசுத் தரப்பில் ஏதும் நடக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டுதான் சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘வன்கொடுமைச் சட்டப்படி ஆர்.எஸ்.பாரதி மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்குமாறு’ மூன்று முறை மென்ஷன் செய்கிறார் திமுகவின் சட்ட ஆலோசகரும் மாநிலங்களவை எம்பியுமான என்.ஆர். இளங்கோ.

அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘வழக்குப் பதிவாகி மாதக் கணக்கில் ஆகிவிட்டது. இப்போது உடனடியாக கைது நடவடிக்கைக்கு இடமிருக்காது’ என்று கருதியே விசாரணையை தள்ளிப் போட்டனர்.

இந்த நிலையில்தான் திமுக சந்தேகப்பட்டது மாதிரியே ஆர்.எஸ்.பாரதியை அவசர அவசரமாக மே 23 ஆம் தேதி கைது செய்த மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார், அவரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதன் பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் இல்லத்தில் ஆர்.எஸ்.பாரதி ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதை பாரதி தரப்பினர் எழும்பூர் நீதிபதியிடம் எடுத்துரைத்தனர். பின்னர், உச்ச நீதிமன்றம் ஊரடங்கு காலத்தில் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வழிகாட்டியிருப்பதையும் எடுத்துரைத்தனர். இந்த சட்ட பாயின்ட்டுகளோடு சேர்த்துதான், “எனது மகன் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வருகிறார். மேலும், தனக்கு சளி மற்றும் இருமல் இருப்பதால் கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் பாரதி.

இதையடுத்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, இந்த முதல் தகவல் அறிக்கை மீதான ரிமாண்டை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். அதாவது உயர் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை பற்றிய வழக்கின் முடிவு வராததால் ரிமாண்டை நிறுத்தி வைத்துள்ளார் நீதிபதி. ஜூன் 1 வரை பாரதியின் ரிமாண்ட் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் வரும் 27 ஆம் தேதி புதன் கிழமை வருகிறது. அன்று உயர் நீதிமன்றம் ஆர்.எஸ்.பாரதியின் வேண்டுகோளை ஏற்று முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தால் அவர் சிறை செல்ல வேண்டியிருக்காது. மாறாக ஆர்.எஸ்.பாரதியின் மனு நிராகரிக்கப்பட்டால் உடனடியாக பாரதி ரிமாண்ட் செய்யப்படலாம் என்பதே இப்போதைய சட்ட ரீதியான நிலைமை.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share