வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்!

Published On:

| By Balaji

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம்,குன்னூரின் காட்டேரி பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

நேற்று முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி,மற்றும் பிரிகேடியர் ஆகியோரின் உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

வீரர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் இதுவரை வீரர்கள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார், பிரதீப் , சௌஹான், ராணா பிரதாப் தாஸ், குல்தீப் சிங் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு இன்று காலை அவர்களது குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில்,”தமிழ்நாடு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லான்ஸ் நாயக் பி சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த சாய் தேஜா அவர்கள் முப்படைத்தளபதி பிபின் ராவத் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share