கொரோனாவால் உயிரிழப்பு: குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கீடு!

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கத் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து நேற்று அரசாணை வெளியிட்டது.

தமிழகத்தில் நேற்று வரை 36,805 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50,000 நிவாரணம் வழங்க மாநிலங்களுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதன்படி கடந்த டிசம்பர் 8ஆம் தேதி சென்னையில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த சூழலில் தற்போது 38 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸால் உயிரிழந்த 36,413 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்க தமிழக அரசு நேற்று நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. நிவாரணம் வழங்குவதற்காகப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 182.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர் கொரோனா நோய் தொற்றினால் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ் வைத்திருந்தால் https://www.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவும், உங்கள் பகுதியில் இருக்கும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share