திருத்தணியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,750 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மேம்பாட்டிற்காகக் கடன் உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கான நிகழ்ச்சி நேற்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடைபெற்றது.
இதில், தமிழகம் முழுவதும் 58,463 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பேருக்கு ரூ.2,750 கோடி கடனுதவி அளிக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதன்பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இந்தியாவிலேயே முதன்முதலாகப் பெண்களுடைய பொருளாதார முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்த ஆட்சிதான் கலைஞர் தலைமையிலிருந்த திமுக ஆட்சி. அந்த ஆட்சியில் தான் இந்தக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் முதன் முதலில் தொடங்கியிருந்தாலும், அதைத் தொடர்ந்து சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அது தொடங்கப்பட்டது.
அடுத்து வந்த ஆட்சி அந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தவில்லை. நான் அரசியலாக்க விரும்பவில்லை. இந்த சுய உதவிக் குழுவின் வரலாற்றை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கூறுகிறேன். இந்த நிதி ஆண்டில் மட்டும் 17,479 சுய உதவிக் குழுக்களுக்கு 87.39 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர் கண்டறியப்பட்டு 5838 சங்கங்கள் மூலமாக 14.59 கோடி ரூபாய் இந்த நிதி ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 36 லட்சத்து 97 ஆயிரத்து 59 குழுக்களுக்கு 1 லட்சத்து 4 ஆயிரத்து 13 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தர இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதுவரை 6777 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. 2022க்குள் அடுத்த 10 ஆயிரம் கோடி இலக்கை எட்டிட நான் உத்தரவிட்டுள்ளேன்.
10 முதல் 20 லட்சம் ரூபாய் வரை சொத்துப் பிணையம் இல்லாமல் கடன் வழங்கக் குறுந்தொழில் கடன் உத்தரவாத நிதியும் வழங்கப்பட்டு வருகிறது. ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை உருவாக்கவும், அக்கூட்டமைப்புகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் உத்தரவுகள் போடப்பட்டுள்ளது. இந்த வகையில் 10 லட்சம் முதல் மூன்றரை கோடி ரூபாய் வரை கடன் பெறலாம்.
திமுக ஆட்சியில் முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை மீண்டும் புதுப்பித்து இருக்கிறோம். தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். வறுமை ஒழிப்பு என்பதையும் தாண்டி, ஊரகத் தொழில் மேம்பாட்டுத் திட்டமாக இதனை வடிவமைத்துள்ளோம்.
இப்படி ஏராளமான திட்டங்கள் நம்முடைய தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தலைச் சந்திப்பதற்கு முன்பு நான் சொன்ன உறுதிமொழிகளை முழுமையாக நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் என்று நான் சொல்லவில்லை, படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நிறைவேற்ற முடியாமல் நாங்கள் விட்டுவிட மாட்டோம்.
மகளிர் தொழில் முனைவோர்களாக மட்டுமல்ல-தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உயர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். அப்படி வாழ்வதற்கான, நீங்கள் உயர்வதற்கான அனைத்து உதவிகளையும் என்னுடைய தலைமையில் இருக்கக்கூடிய, மன்னிக்க வேண்டும், என்னுடைய தலைமையில் என்று சொல்லக்கூடாது, நம்முடைய ஆட்சி இப்போது நடந்துகொண்டிருக்கிறது, நம்முடைய ஆட்சியின் மூலமாக இவை எல்லாம் தொடரும், தொடரும் என்று உறுதி கூறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
**-பிரியா**
�,